மு.க.ஸ்டாலின்

 

படம்: ஜெ.மனோகரன்

தமிழகம்

“தவெக ஆட்சி நீடிப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல” - கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

டி.ஜி.ரகுபதி

கோவை: “சினிமாவில் சக நடிகர்கள் மீது அவதூறு பரப்பி வெற்றி பெற்ற அதே ரூட்டில் ஒருமுறை ஜெயித்துவிட்டனர். மக்களின் கண்ணீரே இந்த ஆட்சியை முடித்துவிடும். இந்த ஆட்சி நீடிப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது அல்ல” என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திராவிடர் கழகம் சார்பில், தந்தை பெரியார் 148-ம் ஆண்டு பிறந்தநாள் விழா, ‘பெரியார் அறிவுலகம்’ தந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கோவை வஉசி மைதானத்தில் இன்று (நவ.4) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு திக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கோவையின் அடையாளமாக பெரியார் அறிவுலகம் கம்பீரமாக நிற்கிறது. நாங்கள் செல்ல வேண்டிய பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது என்று கூறியவன் நான். கோவையில் நாம் செய்த திட்டப்பணிகளின் மணிமகுடமாக பெரியார் அறிவுலகம் அமைந்துள்ளது.

திருநெல்வேலியில் கண்ணியம்மிக்க காயிதே மில்லத் பெயரிலும், கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரிலும், சேலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும் நூலகங்களை அமைக்கும் பணிகளை நாம் தொடங்கினோம். திமுக ஆட்சியில் முடிவான திட்டங்களை, காரணங்கள் தெரிவிக்காமல், இன்றைய ஆட்சியில் ரத்து செய்கின்றனர். நெல்லை, கடலூர், சேலம் நூலகங்களுக்கு அந்த சூழ்நிலை வந்துவிடாமல், சீக்கிரம் பணிகளை முடித்து திறக்க வேண்டும்.

99 சதவீதம் பணிகள் முடிந்ததால் திறப்பு:

பெரியார் அறிவுலகம் தொடக்க திட்டமாக இருந்திருந்தால் இதற்கும் மூடுவிழா இந்த ஆட்சியில் நடத்தியிருப்பார்கள். 99 சதவீதம் பணிகள் முடிந்து விட்டதால், வேறுவழியில்லாமல் திறந்துள்ளனர். தவெக ஆட்சியை நான் மட்டுமல்ல, எல்லா தலைவர்களும் விமர்சிக்கின்றனர். என் ஆட்சியில் பவர் சென்டர்கள் இருக்காது எனக்கூறிய முதல்வர் விஜய் டம்மி ஆகிவிட்டார். அவர் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் சென்டர்கள் தான் இந்த ஆட்சியை ஆட்டிப் படைக்கின்றனர்.

முதல்வரை வைத்து இந்த பவர் சென்டர்கள் வித்தை காட்டும் சர்க்கஸ் தான் தவெக ஆட்சி. இந்த ஆட்சி வர வேண்டும் என வாக்களித்தவர்கள், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக புலம்பி வருகின்றனர். திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்து, 2 மடங்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் போட்டதை நியாயப்படுத்த இந்த செயற்கை மின்வெட்டை உருவாக்குகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தவெகவினரே அதிகம் சிக்குகின்றனர். இளைஞர் அணி போல், தவெகவில் போதைப்பொருள் அணி, பாலியல் குற்றவாளிகள் அணி உருவாக்க வேண்டும்.

அவலங்களை மறைக்க ரெய்டு:

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்கின்றன. இது தான் தவெக அரசு. திமுக ஆட்சியில் நாட்டிலேயே உச்சத்தில் இருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இந்த 5 மாதங்களில் தரைமட்டத்துக்கு சென்று விட்டது. 5 ஆண்டு அவமானங்களை 5 மாதங்களில் வாங்கிவிட்டனர். இந்த சோப்பலாங்கி ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் வேதனையில் உள்ளனர்.

முதல்வர் பொறுப்பு என்பது 10 - 5 அலுவலக வேலை இல்லை. ஒட்டுமொத்தமாக தன்னை ஒப்படைத்துவிட்டு வாழ வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தவெக ஆட்சியின் அவலங்களை மறைக்க, திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் திரும்ப திரும்ப ரெய்டு நடத்துகின்றனர். இடைத்தேர்தல் வருவதால் ஷோ காட்ட இதுபோன்று செய்கின்றனர். இதை பார்த்து பயந்து திமுக பின்வாங்காது.

முதல்வர் அந்த பொறுப்புக்குரிய பொறுப்போடு செயல்பட வேண்டும். தவெக நிர்வாகி போதைப் பொருள் வழக்கில் கைதானதற்கு முதல்வர் விஜய் விளக்கம் அளித்திருக்க வேண்டும். மாநில காவல்துறை ஏன் கைது செய்யவில்லை. முதல்வர் விஜய் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். சினிமாவில் சக நடிகர்கள் மீது அவதூறு பரப்பி வெற்றி பெற்ற அதே ரூட்டில் ஒருமுறை ஜெயித்துவிட்டனர். இனி தமிழ்நாடு மக்கள் ஏமாற மாட்டார்கள். மக்களின் கண்ணீரே இந்த ஆட்சியை முடித்துவிடும். இந்த ஆட்சி நீடிப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT