காங். முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா

 
தமிழகம்

காங். முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டு தடை

தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் ரூ.17.03 லட்சம் செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்துக்கு அவர் கணக்கு காட்டியிருந்தார். ஆனால், அவர் வுக்கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்ற புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் முன்னணி நாளிதழ்களுக்கு விளம்பரம் வழங்கிய ரூ.32 லட்சம் வரையிலான செலவு கணக்கை அசன் மவுலானா மறைத்தது தெரியவந்தது. அப்போது தேர்தல் செலவினமாக ரூ.30.80 லட்சம் வரை தேர்தல் ஆணையம் அனுமதித்திருந்தது. அசன் மவுலானா அதை மீறி செலவிட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு, “அந்த விளம்பரங்கள் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டன. எனவே, அந்த செலவுக்கு நான் பொறுப்பல்ல" என்று அசன் மவுலானா விளக்கம் அளித்தார். ஆனால், விளம் பரங் களில் வேட்பாளர் பெயர், புகைப்படம் இடம் பெற்றதுடன், குறிப்பிட்ட தொகுதி மக்களிடம் அவருக்கு வாக்களிக்குமாறு நேரடியாகக் கோரப்பட்டிருந்ததால். அது வேட்பாளரின் தேர்தல் செலவாகக் கருதப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அசன் மவுலானாவை 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறி விப்பாணை அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2026 ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு எம்.பி. அல்லது எம்எல்ஏ தேர்தலில் அசன் மவுலானா போட்டியிட முடியாது.

பழிவாங்கும் அரசியல்: இது குறித்து அசன் மவுலானா சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், "பாஜவுக்கு என் மேல் என்ன காழ்ப்புணர்வு என்று தெரியவில்லை. கண்டிப்பாக இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. என் மீதான நடவடிக்கை பழிவாங்கும் அரசியல்" என்றார். இவரது தந்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜே.எம்.ஆரூண். இவர் தேனி எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT