மதுரை: கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேரை சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் 100 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக 3,054 ஏக்கர் நிலங்கள் இருந்தன. தற்போது 150 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது.
எஞ்சிய நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்நிலங்களின் தற்போதைய மதிப்பு 200 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த நிலங்களில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கடந்த 2018-ல் வழக்கு தொடர்ந்தேன். இதனை விசாரித்த நீதிபதிகள், 12 வாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை, இதனால் இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன் ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் கே.எஸ்.பழனிசாமி (வருவாய்த் துறை செயலாளர்), ஏ.கார்த்திக் (உள்துறை செயலாளர்), வி.ராஜாராமன் (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர்), பி.சந்திரமோகன்(வருவாய் நிர்வாக ஆணையர்), ராஜேஷ் லக்கானி (நில நிர்வாக ஆணையர்), டி.ஜி.வினய் (இந்து சமய மற்றும் அறநிலைய ஆணையர்), கரூர் மாவட்ட ஆட்சியர் சி. முத்துக்குமரன் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன்(மத்திய மண்டல ஐஜி ) ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
இவர்களில் அறநிலையத்துறை ஆணையர் வினய் அக்.5-ல் நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்தும், இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்தும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.