உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: நுகர்வோர் குறைதீர் ஆணையத்தலைவர், உறுப்பினர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவராக இருந்தவர் திருநீலபிரசாத். இவர் 2025ஜூன் 27-ல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதை ரத்து செய்து புதிய விதிகளின் அடிப்படையில், புதிய தலைவர் நியமிக்கும் வரை பணிநீட்டிப்பு வழங்கவும், தமிழகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கவும் உத்தரவிடக்கோரி திருநீலபிரசாத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எம்.சுதீர்குமார் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு 65 வயதாகிறது. இந்த அடிப்படையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிப்படி தலைவர் பதவியில் இருந்து மனுதாரர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் 2025 ஜூன் 21-ல் பிறப்பித்த உத்தரவில், மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் மன்றங்களின் தலைவர், பிற உறுப்பினர்களின் பதவிக் காலம் முடியும் நிலையில் புதிய தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்யும் வரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவி நீட்டிப்பு கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. அரசு தரப்பில், மாவட்ட ஆணையத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை 65 வயதுக்கு மேல் அப்பதவியில் தொடர அனுமதிக்க கூடாது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தமிழகத்துக்கும் பொருந்தும். அந்த உத்தரவை அமல்படுத்துவது மாநில அரசின் கடமை. எனவே நுகர்வோர் ஆணைய தலைவர்கள், உறுப்பினர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்கமுடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் புதியவர்கள் நியமிக்கும் வரை ஏற்கெனவே இருந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக ஜூன் 12-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.