செல்வப்பெருந்தகை

 
தமிழகம்

‘தென் மாநிலங்களுக்கு அரசியல் தண்டனை வழங்கும் தொகுதி மறுசீரமைப்பு’ - தமிழக காங். போராட்டம் அறிவிப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: தென்னிந்திய மாநிலங்களுக்கு அரசியல் தண்டனை வழங்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நாளை மாநிலம் முழுவதும் வலுவான ஜனநாயக எதிர்ப்பை போராட்டமாக அறிவிக்கிறது. நாளை அனைவரும் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு உடை அணிந்தும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்த்து அரசியல் அதிகாரத்தை ஒரே மையத்தில் குவிக்க முனையும் ஒன்றிய பாசிச பாரதிய ஜனதா அரசின் செயல்பாடுகள், திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகளும், ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்களும் ஆகும்.

          

மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை மறுசீரமைக்கும் இந்த முயற்சி, அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கை. மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக கடைபிடித்து, சமூக முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, சுகாதார முன்னேற்றம் ஆகிய துறைகளில் முன்னிலை வகித்து வரும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு, இன்று அரசியல் தண்டனை வழங்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை உருவெடுத்துள்ளது.

முன்னேற்றத்தை தண்டிக்கும் இந்த அணுகுமுறை, ஜனநாயகத்தின் உள்ளார்ந்த நியாயத்தையே கேள்விக்குறியாக்குகிறது. நம் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை சுருக்கும் இத்தகைய முயற்சி, தென்னிந்திய மக்களின் குரலை மெதுவாக மங்கச் செய்து, வட மைய ஆதிக்கத்தை உறுதி செய்யும் திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சி ஆகும்.

நாட்டின் பன்முகத்தன்மை, மொழி உரிமைகள், மாநில சுயாட்சித் தன்மை ஆகியவற்றை மதிக்காத இந்த அணுகுமுறை, இந்திய ஒன்றியத்தின் ஆன்மாவையே சிதைக்கும் ஆபத்தான பாதையை உருவாக்குகிறது. தமிழ்நாட்டின் அரசியல் உரிமைகளை எவராலும் குறைக்க முடியாது. தமிழ்நாட்டின் குரலை எவராலும் அடக்க முடியாது. இது தமிழ்நாட்டின் சுயமரியாதையையும், அதன் அரசியல் இருப்பையும் காக்கும் போராட்டம். இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து குரல் எழுப்புவது ஒவ்வொரு ஜனநாயக நம்பிக்கையுள்ள குடிமகனின் கடமையாகும்.

இத்தகைய அநியாயமான, ஆதிக்க நோக்கமுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நாளை மாநிலம் முழுவதும் மக்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பும் வலுவான ஜனநாயக எதிர்ப்பை போராட்டமாக அறிவிக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு உடை அணிந்தும், இந்த அரசியல் அநியாயத்திற்கு எதிராக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம்.

இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும். ஆனால் அது மவுனமாக இருக்கக்கூடாது. நமது குரல் அரசியல் தாக்கத்துடனும் தெளிவுடனும் ஒன்றிய ஆட்சியாளர்களின் செவிகளில் ஒலிக்க வேண்டும். தமிழ்நாடு அநியாயங்களை கண்டு மௌனமாக இருக்காது. தமிழ்நாடு தன்னுடைய உரிமைகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காது. தமிழ்நாடு தனது அரசியல் குரலை அடக்க அனுமதிக்காது. ஜனநாயகத்தின் அடிப்படை குரலைக் காக்கவும், மாநிலங்களின் சமநிலைத் தன்மையை நிலைநிறுத்தவும், இந்தப் போராட்டம் ஒரு தொடக்கமாக அமையட்டும்.

அதிகார ஆதிக்கத்தை முறியடிப்போம். ஜனநாயகத்தை காப்போம். தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை நிலைநிறுத்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT