சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. உடன் சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர்.

 

படம் : எஸ்.குரு பிரசாத்

தமிழகம்

“அரசு உயரதிகாரிகள் இடமாற்றத்தில் சூழ்ச்சி” - பிரேமலதா குற்றச்சாட்டு

எஸ்.விஜயகுமார்

சேலம்: தமிழகத்தில் அரசு உயரதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்ததன் பின்னணியில் சூழ்ச்சி இருப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “தமிழகம் முழுவதும் தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். செல்லும் இடங்களிலெல்லாம், மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி நிச்சயம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். போட்டியிடும் அனைத்து இடங்களிலும் தேமுதிக வெற்றி பெறும். முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார்.

          

கடலூரில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிவிப்பின்போது ஏற்பட்டதை, எதிர்க்கட்சிகளும், சமூக ஊடகங்களும் வேண்டுமென்றே சர்ச்சையாக மாற்றுகின்றன. அண்ணன் திருமாவளவன், இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். நாங்கள் இருவரும் போனில் பேசிவிட்டோம். விஜயகாந்த்தும் திருமாவளவனும் சகோதரர்களாக பழகியவர்கள். மக்கள் நலக்கூட்டணியில் அவர்களுக்கு இடையிலான நட்பு குறித்து அனைவருக்கும் தெரியும். எங்களுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை.

நான் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியிலும் அண்ணன் திருமாவளவன் பிரச்சாரத்துக்கு வரவுள்ளார்.

மும்மொழிக் கொள்கை, தமிழகத்துக்கு ஏற்புடையதல்ல. நாம் அணியும் கண்ணாடி போலவே, பணிபுரிவதற்காக வேறு மாநிலத்துக்கு செல்லும்போது மொழி தேவைப்படும். இரு மொழிக் கொள்கை தான், தமிழக அரசின் கொள்கை. அதுதான் எங்களின் நிலைப்பாடு.

தேர்தல் நேரத்தில் அரசு அதிகாரிகள் மாற்றப்படுவது இயல்பான ஒன்று. ஆனால், தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் பல உயரதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி இருப்பது உள்நோக்கம் கொண்டது. இதற்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மே 4ம் தேதி பதில் கிடைக்கும்.

தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஏற்கனவே பலர் இதுபோல போட்டியிட்டுள்ளனர், இது புதிதல்ல. திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ரூ.8 ஆயிரம் கூப்பன் என்பது, மக்கள் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை, அவர் சொன்னது போல சூப்பர் ஸ்டார், அது நிச்சயம் தேர்தலில் வெற்றியைத் தரும்” என்றார்.

SCROLL FOR NEXT