சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கலை, பண்பாடு, தொல்லியல் அருங்காட்சியகங்கள் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்தார்.
அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: கரகாட்டம், கும்மி, ஒயிலாட்டம், கோலாட்டம், தெருக்கூத்து, பறை, சிலம்பாட்டம் ஆகிய மரபுசார் கலைகளை அதன் தரம் மாறாமல் மேம்படுத்த, கோவை, தஞ்சாவூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கலை ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.
58 வயது நிறைவடைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கப்படும் ரூ.3,000 நிதியுதவி, கூடுதலாக 1,500 கலைஞர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
நாட்டுப்புறக் கலைஞர்கள் இசைக் கருவிகள், ஆடை, அணிகலன்கள் வாங்குவதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். கலை பண்பாட்டுத் துறையின் கட்டிடப் பராமரிப்பு நிதி ரூ.1.16 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.
தமிழகத்தின் பண்பாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் வகையில், முதல்கட்டமாக 5 ஆண்டுகளில் 76 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், தொல்லியல் தலங்களை சீரமைக்க ‘தமிழ்ப் பாரம்பரிய பாதுகாப்புப் பணிகள்’ திட்டத்தின்கீழ் ரூ.49 கோடி ஒதுக்கப்படும்.
பட்டறைப்பெரும்புதூர், குற்றாலம் (நாட்டுப்புற அகழ்வைப்பகம்), தருமபுரி (நடுகல் அகழ்வைப்பகம்) ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தும் பணிகள் ரூ.12 கோடியில் மேற்கொள்ளப்படும்.
அகழாய்வில் கண்டெடுக்கப்படும் பொருட்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய ரூ.2 கோடியில் நவீன தொல்லியல் ஆய்வகம், மதுரையில் ‘தமிழர் நாகரிக அருங்காட்சியகம்’ அமைப்பதற்கான திட்ட அறிக்கை ரூ.2 கோடியில் தயாரிக்கப்படும் என்பது உள்ளிட்ட 22 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.