காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில்...

 
தமிழகம்

தமிழக மக்களை தேர்தல் ஆணையம் தோற்கடிக்க விடமாட்டோம்: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சொல்கிறார்

செய்திப்பிரிவு

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த, காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை கட்சித் தலைமை நியமித்துள்ளது.

அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக காங்கிரஸின் தற்போதைய நிலை, பலம் மற்றும் பலவீனம், கட்சியை வளர்க்க என்ன செய்ய வேண்டும், தமிழகத்தில் காங்கிரஸூக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், நமது பலத்துக்கு திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்கலாம் என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐவர் குழு தனியாக ஆலோசனை நடத்தியது.

பின்னர், குழுவின் தலைவர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடினோம்.

வாக்குத் திருட்டுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 1 கோடியே 14 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் இதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் சிறப்பாகவே மக்கள் பணியாற்றி வருகிறது. இக்கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை எப்படி எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளை எப்படி அணுகுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணி எப்படி வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வெற்றி தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது. அந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் பிஹார் மக்களை தோற்கடித்துள்ளது.

அதேபோல தமிழகத்தில் நடக்க விடமாட்டோம். தமிழக மக்களை தேர்தல் ஆணையம் தோற்கடிக்க விடமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT