சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில்...
தமிழகத்தில் 2026 தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக காங்கிஸ் இருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சேவா தள மாநில தலைவர் குங்ஃபூ விஜயன் தலைமையில் சேவாதள அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, தொண்டர்களுக்கு செல்வப்பெருந்தை இனிப்பு வழங்கினார்.
பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானும், இந்தியாவும் ஒன்றிணைந்த நாடாக இருக்கும்போது, லாகூரில் நடந்த மாநாட்டில் பூரண சுயராஜ் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் காங்கிரஸ் மாநாட்டில் தான் ஜன.26-ம் தேதியை குடியரசு தினமாக கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.
இது தான் குடியரசு தினத்தின் வரலாறு. நம் தியாக தீபங்களாக இருக்கும் காங்கிரஸ் பேரியக்க தலைவர்கள் இந்த தேசத்தின் விடுதலையையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் இயற்றிக் கொடுத்தார்கள். ஆனால் இன்று, அந்த சுதந்திரம் சிதைக்கப்படுகிறது. பாஜக ஆட்சியாளர்களால் அச்சுறுத்தப்படுகிறது என்பது தான் மிகப்பெரிய வேதனை.
காங்கிரஸ் தலைவர்கள் இல்லாமல் இந்த நாடு விடுதலை அடையவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி முடிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் இல்லாமல் இந்த நாடு குடியரசு நாடாக ஆகவில்லை. ஆகவே, இன்றைய இளைஞர்களுக்கு இதையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
பாஜக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை கொச்சைப்படுத்தி வருகின்றது. பாஜக-வினரும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முதலில் இந்த தேசத்தின் வரலாற்றை படிக்க வேண்டும். எந்தவித ஆயுதமும் இல்லாமல் இந்த தேசத்துக்கு மகாத்மா காந்தி விடுதலையை பெற்றுத் தந்தார். அகிம்சை முறையில் யாத்திரை, பேரணிகள் நடத்தி காந்தியடிகள் போராடியது பிரிட்டிஷ்காரர்களை கலங்கடிக்கச் செய்தது. இதையெல்லாம் தெரியாத பாஜக-வினர் வரலாற்று திரிப்புகளை செய்து வருகின்றனர்.
வருகின்ற 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை வீடு தோறும் எடுத்துச் செல்வோம் என்று இந்த குடியரசு தினத்தில் சபதம் ஏற்போம். மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதி திட்டத்தை சிதைக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து வரும், பிப்.1-ம் தேதி முதல் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கின்றோம். சென்னை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட மண்டலங்கள் வாரியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.