புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

 
தமிழகம்

போலி மருந்து விவகாரம்: புதுச்சேரி முதல்வர், பேரவைத் தலைவர், அமைச்சர் ராஜினாமா செய்ய காங். வலியுறுத்தல்

ரூ.10,000 கோடிக்கு இமாலய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து வழக்கில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு இமாலய ஊழல் நடந்துள்ளது என்றும், முதல்வர், சட்டப்பேரவை தலைவர், அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அம்மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

போலி மருந்து விவகாரத்தில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்தச் சூழலில், இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். துணைநிலை ஆளுநரை சந்தித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்தோம். டெல்லியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

எங்களின் கோரிக்கை நியாயம் என்று உணர்ந்து துணைநிலை ஆளுநர் சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இது மக்களின் உயிர் பிரச்சினை. ஏற்கெனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் இதில் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலமே கண்டிராத மிகப்பெரிய ஊழல் இது. இதில் முறையாகவும், முழுமையாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் இருந்து வந்து காவல்துறையினரும் இந்த வழக்கில் ஆதாரங்களை சேகரிக்கின்றனர். இந்த வழக்கில் ஆட்சியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். சட்டப்பேரவை தலைவர் செல்வம் இதில் நேரடியாக தலையிட்டிருக்கிறார். ஆகவே அவரை குற்றவாளியாக சிபிஐ விசாரணையில் சேர்க்க வேண்டும். அவரும் போலி மருந்து தயாரிப்பவர்களோடு உடந்தையாக இருந்திருக்கிறார். செல்வத்தை விசாரித்தால் இன்னும் நிறைய விவரங்கள் வெளியே வரும். செல்வத்தை காப்பாற்றும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபடக்கூடாது.

இந்த வழக்கில் பாஜக, என். ஆர்.காங்கிரஸ் அரசியல் தலைவர்களும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். அரியாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ரூ.10 ஆயிரம் கோடிக்கு போலி மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய இமாலய ஊழல். பல நூறு கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போலி மருந்து மோசடியில் கைதாகியுள்ள ராஜா சட்டப்பேரவை தலைவருக்கு நீலநிற சொகுசு காரை வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ரூ.42 லட்சத்துக்கு தீபாவளிக்கு அவருடைய தொகுதியில் பரிசு பொருட்கள் கொடுக்க ராஜா பணம் கொடுத்திருக்கிறார்.

நேரடியாக சட்டப்பேரவை தலைவர் அவரிடம் கையூட்டு பெற்றுள்ளார். சட்டப்பேரவை தலைவர் பதவியில் இருந்தால் பல ஆதாரங்களை அழிப்பதற்கான நடவடிக்கை இருக்கும். ஆகவே அவர் பதவி விலக வேண்டும். முதல்வர் ரங்கசாமி தான் சுகாதாரத்துறையின் அமைச்சர். அவரது துறையில் இது நடந்துள்ள காரணத்தால் அவரும் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ராஜாவிடம் ‘அக்கா’ அடைமொழியை கொண்டவர் மற்றும் சமீபத்தில் ராஜினாமா செய்த சத்தியவேந்தன் ஆகியோரும் கையூட்டு பெற்றுள்ளனர். இதுபோன்ற பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் ரங்கசாமிக்கு சொகுசு கார் யார் வாங்கி கொடுத்தது என்பதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.

தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் வசம் உள்ளது. அவரது துறையின் அனுமதியின்றி இந்த போலி மருந்து தொழிற்சாலைகள் இயங்கி வந்துள்ளன. இதனால் அமைச்சர் நமச்சிவாயமும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

சிபிஐ, என்ஐஏ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை விசாரணை நடத்தும் போது அதிகாரத்தில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுக்க கூடாது. ஆகவே தான் முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

சிபிஐ விசாரணை அழுத்தமின்றி சுதந்திரமாக நடக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவையான ஆதரங்களை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT