ப.சிதம்பரம்
சென்னை: “இந்தியாவிலேயே தமிழகம்தான் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது என மத்திய அரசின் நிதி ஆயோக் தெளிவாக குறிப்பிடுகிறது. ஆனால், தோழர் ஒருவர் உத்தரப் பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை” என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பிப்ரவரி மாதமே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கலாம். நல்ல தேர்தல் அனுபவம் உள்ள இண்டியா கூட்டணியே வெல்லும். ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி குறித்து திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.
இண்டியா கூட்டணி மேலும் வலுவடையும். காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என திமுக தலைமை மற்றும் காங்கிரஸ் தலைமை இணைந்து முடிவு செய்யும்.
இந்தியாவிலேயே தமிழகம் தான் வளர்ச்சியில் முதலிடம் என மத்திய அரசின் நிதி ஆயோக் தெளிவாக குறிப்பிடுகிறது. ஆனால், தோழர் ஒருவர் உத்தரப் பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதை வெளியே சொல்லவேண்டிய அவசியம் இல்லை. மெத்த படித்தவர்களுடன் நான் பொதுவெளியில் விவாதிக்க விரும்பவில்லை.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியது மிகப் பெரிய இமாலயப் பிழை. இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. பெரியார் ஏற்படுத்தியது சரித்திரப் புரட்சி. இதை காலத்தால் அழிக்க முடியாது.
விஜய் முயற்சி வெல்லாது. இண்டியா கூட்டணிதான் வெல்லும் என முழு நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என்பது குறித்து மற்றவர்கள் தங்களது கருத்தை சொல்லலாம். ஆனால், தலைமை தான் முடிவு செய்யும். தனிமனிதனின் பேச்சு வேறு, கட்சியின் முடிவு வேறு. இது சர்வாதிகார நாடு கிடையாது” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தி கருத்தும் சர்ச்சையும்: காங்கிரஸ் கட்சியின் தரவுகள் பகுப்பாய்வு பிரிவு தலைவரும், ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக கருத்து தெரிவித்திருந்தார். இது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும்போது, “பிரவீன் சக்கரவர்த்தி ஒரு குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் பாஜக ஆட்சியை தூக்கி பிடித்து, தமிழகத்தில் நடைபெறும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சியை தாழ்த்தி பேசுவதை, விமர்சிப்பதை ஒருபோதும் தமிழ்நாடு காங்கிரஸ் அனுமதிக்காது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் படையெடுப்பது போன்று, பிரவீன் சக்கரவர்த்தியும் படையெடுப்பது ஏன் என்பது புரியவில்லை. இது தேவையில்லாத வேலை. தமிழ்நாடு காங்கிரஸுக்கு தலைவராக நான் இருக்கிறேன். அகில இந்திய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இருக்கிறார்.
தமிழகத்தில் அரசியல் செய்ய பிரவீன் சக்கரவர்த்திக்கு விருப்பம் இருந்தால் என்னிடம் சொல்லி இருக்கலாம். அவர் உத்தரபிரதேச பாஜக ஆட்சியை புகழ்ந்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். பிரவீன் சக்கரவர்த்தி மீது புகார் தெரிவித்து காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று செல்வப்பெருந்தகை கூறியது குறிப்பிடத்தக்கது.
அப்பாவு விவரிப்பு: இதனிடையே, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தின் கடன் குறித்து பேசியுள்ளார். தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது. கல்வி, தொழில், ஜிஎஸ்டி பங்களிப்பு என அனைத்திலும் தமிழகமே முதன்மையான இடத்தில் உள்ளது. தமிழகம் வழங்கும் 1 ரூபாய் ஜிஎஸ்டிக்கு மத்திய அரசு வெறும் 29 பைசாவை மட்டுமே திருப்பித் தருகிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்துக்கு 2 ரூபாய் 29 பைசா வழங்குகிறது.
2011-ல் கருணாநிதி ஆட்சியை விட்டுச் செல்லும்போது கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. 2021-ல் அதிமுக ஆட்சியை விட்டுச் சென்றபோது ரூ.5.18 லட்சம் கோடியாக உயர்ந்தது. தற்போது கடன் ரூ.9 லட்சம் கோடியாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு 67 ஆண்டுகளில் மத்திய அரசின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் கடன் ரூ.185 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏழை மக்களுக்கான திட்டங்களை விமர்சிக்க கூடாது” என்று அவர் தெரிவித்தும் கவனிக்கத்தக்கது.