ராகுல் காந்தி
புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலையத்தில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களை ராகுல் காந்தி சந்தித்ததால், திமுக மற்றும் விசிக கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இதில், இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் போட்டியிடுகிறது.
புதுச்சேரியில் இண்டியா கூட்டணி உடைந்ததால் இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் 2 இடங்களிலும், போட்டியிடுகின்றன. காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
அதே நேரத்தில், தொகுதி பங்கீடு, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கியதால் ஏற்பட்ட அதிருப்தியில் சற்று மனதாங்கலுடன் காங்கிரஸ், திமுக கூட்டணி பிரச்சாரம் நடந்து வருகிறது.
ராகுல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதுபோல திமுக பொதுக் கூட்டத்திலும், திமுக வேட்பாளர்களோடு, காங்கிரஸ் வேட்பாளர்கள் பங்கேற்கவும் முறையாக அழைப்பும் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து ராகுல் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் அவை தலைவர் சிவக்குமார், வேட்பாளர்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், அங்காளன், கார்த்திகேயன், கோபால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில முதன்மை செயலாளர் அரிமா தமிழன், உழவர்கரை வேட்பாளர் செல்வ புஷ்பலதா ஆகியோர் பங்கேற்றனர்.
ராகுல் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள், திமுக, விசிக வேட்பாளர்கள் அமர்ந்திருந்தனர்.
இச்சூழலில் திமுகவின் 5 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களும், ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகளை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளரும் பொதுக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை.
ஆனால், காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் ராகுல் காந்தி புதுச்சேரியில் இருந்து திரும்பசெல்லும்போது விமான நிலையத்தில் அவருக்கு சால்வை அணிவித்தனர். காலாப்பட்டு - ஷாஜகான், உழவர்கரை - சிவசங்கரன், ராஜ்பவன் - குமரன், திருபுவனை - வேலு, மங்கலம் ரகுபதி ஆகியோர் ராகுல் காந்தியை விமான நிலையத்தில் தனியாக சந்தித்து பேசினார்கள்
இவர்கள் திமுக, விசிக வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடுவதால் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் கடும் குழப்பம் நீடித்தது. அவர்களுக்காக காங்கிரஸார் யாரும் வாக்கு கேட்கக் கூடாது. தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என புதுச்சேரி காங்கிரஸ் உத்தரவிட்ட நிலையில், ராகுல் காந்தி விமான நிலையத்தில் அவர்களை சந்தித்து இருப்பது திமுக, விசிகவினரை அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.