‘‘ஏற்கெனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கால் தகராறு... இதுல இது வேற..’’ என்று ஒரு திரைப்படத்தில் வடிவேல் காமெடியில் வசனம் வரும். ஏற்கெனவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸில் குரல்கள் வலுத்து வருகின்றன. ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணிக்கான அச்சாரமா? என்ற பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அமையப் போகும் புதிய ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெற்று அதுவும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை துணை முதல்வராக பதவியேற்பார் என்பதைப் போல, ஏப்ரல் மாதம் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து 2026-ன் துணை முதல்வரே என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்தக் காலத்தில் பிரபலமான கவிஞராக இருந்த கா.மு. ஷெரிப்பின் பேரனும், தமிழக காங்கிரஸின் மாநில செயலாளருமான கவி. கா.மு. A.V.M. ஷெரிப் பெயரில் அவரது படத்துடன் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
திமுகவுடன் நெருக்கமாக இருக்கும் செல்வப்பெருந்தகைக்கு இது தெரியுமா? அவரது சம்மதத்தோடுதான் இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதா? ஆட்சியில் பங்கு கோரிக்கையை அவரும் வலியுறுத்துகிறாரா? என்று தமிழக காங்கிரஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.