சென்னை: “மதவாத அரசியலை வீழ்த்த திமுகவை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பயணிப்பதால் அதற்கு ஏற்ப தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்றுள்ளது. கூட்டணியில் திமுகவிடம் பேரம் பேசும் கட்சி விசிக அல்ல. தொகுதிப் பகிர்வே அதிகார பகிர்வு தான்.” என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சியினருடன் திமுக கட்சி அலுவலகமான அறிவாயத்துக்கு வருகை தந்தார். அங்கு திமுக தேர்தல் குழுவினரை சந்தித்த அவர், தாங்கள் போட்டியிட விருப்பும் தொகுதிகளுக்கான பட்டியல் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, தமிழகத்தில் 2021-ம் ஆண்டின் சூழ்நிலையே தற்போது வரை நிலவி வருகிறது. மதவாத அரசியலை வீழ்த்த திமுகவை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பயணிப்பதால் அதற்கு ஏற்ப தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது.
எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து பகிர்ந்து கொண்டோம், பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்றுள்ளது. கூட்டணியில் திமுகவிடம் பேரம் பேசும் கட்சி விசிக அல்ல. தொகுதிப் பகிர்வே அதிகார பகிர்வு தான். எந்த தொகுதி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கவில்லை. ஆட்சியில் பங்கு கேட்கும் சூழல் இன்னும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை.
புதுச்சேரியில் ஒரு தனி தொகுதி உள்பட 3 தொகுதியில் போட்டியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்னதான் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தாலும் திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும்.” என்று திருமாவளவன் உறுதிப்பட கூறியுள்ளார்.