சென்னை: பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்துள்ள பார் கவுன்சிலின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி சுதா, குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.யான வழக்கறிஞர் ஆர். சுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அது ஒரு கருப்பு நாள். பேரறிவாளன் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்யப்படவில்லை. மாறாக அவரை உச்ச நீதிமன்றம் கருணை அடிப்படையில்தான் முன்கூட்டி விடுவித்து உத்தரவிட்டது.
அவரை வழக்கறிஞராகப் பதிவு செய்திருப்பது என்பது தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்துள்ள பார் கவுன்சிலின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். எனவே பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை சட்டப்படி ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
சட்ட ரீதியாக தடை இல்லை
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும், இளம் வழக்கறிஞர்கள் பதிவு கமிட்டியின் தலைவருமான வழக்கறிஞர் கே.பாலு கூறும்போது, ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞராக தன்னை பதிவு
செய்து கொள்வதற்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை.
வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 24-ஏ பிரகாரம் ஒருவர் குற்றவாளி என அறிவி்க்கப்பட்டு அதற்கான தண்டனையை அனுபவித்து முடித்த 2 ஆண்டுகள் கழித்து வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொள்ளலாம். எனவே பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்ததில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை’’ என்றார்.