ஜோதிமணி, மாணிக்கம் தாகூர்

 
தமிழகம்

ஜோதிமணி Vs மாணிக்கம் தாகூர்: தவெக விவகாரத்தில் காங். எம்.பி.க்கள் வார்த்தைப் போர்!

செய்திப்பிரிவு

சென்னை: “குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது” என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசமாக கூறியுள்ளார். அதற்கு, “திடீரென சில தோழமை சுட்டுதல் நிபுணர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்” என மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் எதிர்வினையாற்றியுள்ளார்.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில், ‘தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தருவதற்கு நிச்சயம் அவருக்கு நாம் துணை நிற்போம். ஆனால், அதற்காக தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது.

குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்புக்கு எதிராக, குதிரை பேரத்தை பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாமலும், அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது.

தமிழகத்தில் குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழகத்துக்கு வெளியே எதிர்க்கும் என்ற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்க முடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் செயல்பாடுமேயானால் அது காந்திக்கும், நேருவுக்கும், கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும்.

ராகுல் காந்தி கொள்கைக்காக சமரசமற்று போராடி வரும் சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் எம்.பி, “23-ம் தேதி காங்கிரஸ் ஒழிக... ராகுல் காந்தி ஒழிக என ஸ்டாலின் முன்னிலையில் கோஷம். காங்கிரஸை ஒட்டுண்ணி, துரோகி என்று உதயநிதி அணி தீர்மானம். 25-ம் தேதி காங்கிரஸின் போலி பாஜக எதிர்ப்பும் பல்லிளிக்கிறது என்று ஸ்டாலின் தாக்குதல். அப்போது அமைதி. ஒரு எக்ஸ் போஸ்ட் கூட இல்லை. ஒரு சத்தம் இல்லை. ஒரு கண்டனம் கூட இல்லை. ஆனால், இன்று திடீரென சில தோழமை சுட்டுதல் நிபுணர்கள் வந்து அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க” என சாடினார்.

மாணிக்கம் தாகூரின் இந்த எதிர்வினைக்கும் பதிலளித்த ஜோதிமணி எம்.பி, “தவெக என்ற ஒரு கட்சி உருவாவதற்கு முன்பு இந்த திடீர் திமுக எதிர்ப்பாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று வரலாறு சொல்லும். காமராஜருக்காகக் கூட வாய் திறக்காமல் அவ்வளவு ப(வ்)யம்!

இன்னும் நிறைய சொல்லலாம். கண்ணியம் கருதி தவிர்க்கிறேன். மேலும், நாம் எதிர்க்க வேண்டியது பாஜகவை. சக கட்சிக்காரர்களை அல்ல. காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆதரிக்க வேண்டிய விஷயங்களை ஆதரிப்பதும், எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்ப்பதும், கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும்தான் ஒரு உண்மையான காங்கிரஸ் தொண்டரின் கடமை.

அப்பொழுதுதான் காங்கிரஸ் தனித்தன்மையையும், மதிப்பையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதிகாரத்துக்கு நெருக்கமாக காட்டிக் கொள்வதற்காக காங்கிரஸ் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது. செய்யவும் மாட்டேன். அதேபோல யாரிடமிருந்தும் எனது நம்பகத்தன்மைக்கு எந்த சான்றிதழும் தேவையில்லை. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வோம்” என்று ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT