ஜி.கே மூப்பனாரின் 25-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: மூப்பனார் நினைவிடத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் ஒரே மேடையில் சங்கமித்திருப்பது தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 25-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே அமைந்துள்ள மூப்பனார் நினைவிடம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், துணைத் தலைவர்கள் விடியல் சேகர், முனவர் பாஷா, சக்தி வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், விசிக முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, தமிழருவி மணியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஒரே மேடையில் மூப்பனாருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை எளிய மக்களுக்குத் தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர வண்டிகள், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.
காங்கிரஸிலிருந்து தமாகா பிரிந்து சென்ற பிறகு இரு கட்சிகளும் தனித்தனிப் பாதையில் பயணித்து வந்த சூழலில், “காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவோம்” என்று ஜி.கே.வாசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமாகா தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படத்துக்கு வாசன் மரியாதை செலுத்தினார். தற்போது மூப்பனார் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி, ஒரே மேடையில் சங்கமித்திருப்பதன் மூலம் இரு கட்சிகளுக்கு இடையிலான இணக்கம் மேலும் உறுதியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகா இருந்தபோது பாஜக மற்றும் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த முறை அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
மாறாக தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இதில் பெருமளவில் பங்கேற்றிருப்பது தமிழக தேர்தல் களத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு தொடக்கமாகவும், அதில் தமாகாவும் இடம்பெறுவதற்குமான வலுவான சமிக்ஞையாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.