சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸின் தோல்வி குறித்து விரிவாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டது. முடிவில் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்று சரிவைச் சந்தித்தது.
இந்தத் தோல்விக்கு கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல தொகுதிகளில் முறையாகத் தேர்தல் பணியாற்றாததும், சொந்தக் கட்சியின் வேட்பாளர்களை வீழ்த்தும் நோக்கில் கட்சி விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டதுதான் முக்கியக் காரணம் என அடுக்கடுக்கான புகார்கள் டெல்லி தலைமைக்குச் சென்றன.
இதையடுத்து, தேர்தல் தோல்வி மற்றும் புகார்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பிரத்தியேக குழுவை அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் தலைவராக முன்னாள் எம்.பி. ஜெயக்குமார் செயல்படுவார். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், சி.டி.மெய்யப்பன், கமலிகா காமராஜர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இக்குழுவினர் விரைவில் பாதிக்கப்பட்ட தொகுதிகளுக்கு நேரில் சென்று வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி, தங்கள் இறுதி அறிக்கையை டெல்லி மேலிடத்திற்கு சமர்ப்பிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் கட்சிப் பணியை சரியாக செய்யாதவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.