சிவகாசி: திமுக அடித்த கமிஷனை பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட்டணி தர்மத்திற்காக நாங்கள் அதை வெளியே சொல்லவில்லை என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட மாணிக்கம் தாகூர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 2026 தேர்தல் தோல்வி பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதில் இருந்து மீள முடியாத சிலர் புலம்பி வருகின்றனர். இவ்வளவு நாட்களாக உதயநிதி இடம் இருந்து வந்த புலம்பல் தற்போது சீமானிடம் இருந்து வருகிறது.
பிச்சை எடுப்பதையே தொழிலாக வைத்துள்ள, சொந்த மாவட்டத்திலேயே டெபாசிட் வாங்க முடியாத சீமான் 100 ஆண்டு பாரம்பரிய கட்சியை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. சீமான் மரியாதையாக பேசாவிட்டால் அதே பாணியில் காங்கிரஸ் காரன் திருப்பி அடிப்பான். இங்கிலாந்து, கனடாவுக்கு வசூல் செய்ய செல்லும் சீமான், இலங்கைக்கு சென்று தமிழர்களை பார்க்கவில்லை.
2014-ல் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு தோல்வி அடைந்தது. 2016-ல் தனியாக போட்டியிட்ட திமுகவும் தோல்வி அடைந்தது. அதன்பின் திமுக தான் கூட்டணிக்கு வந்தது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள் என நாங்கள் கேட்கவில்லை. தமிழ்நாட்டில் ராகுல் காந்தி மீது இருக்கும் நம்பிக்கை, மரியாதையை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காட்டினார்.
சீமானின் செல்வாக்கு சரிய ஆரம்பித்து விட்டது. திமுக ஆதரவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சீமான் பேசியுள்ளார். காங்கிரஸ் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற உதயநிதியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். உதயநிதி ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் நான் எனது பதவியை ராஜினாமா செய்வேன். சவாலுக்கு தயாரா என சீமான் தனது தம்பி உதயநிதியிடம் கேட்டு சொல்ல வேண்டும்.
தேர்தலுக்கு முன் திமுகவை விமர்சித்த சீமான், அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொடுத்த பின்னர் உதயநிதிக்கு ஜால்ரா அடிக்கிறார். திமுக தோல்விக்கு பென் நிறுவனம் காரணமா அல்லது உதயநிதி காரணமாக என நடக்கும் விவாதத்தை மறைக்க காங்கிரஸ் மீது பழி போடுகிறது திமுக.
கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக எந்த திசையில் செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். உண்மையான திமுககாரர்கள் வீட்டில் இருக்கிறார்கள். வாடகைக்கு ஆட்களை அழைத்து வந்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். மே 4-ம் தேதி திமுக - அதிமுக கூட்டணி அமைக்க பேச்சு நடத்தியதால் நாங்கள் திமுக தலைவரை பார்க்க செல்லவில்லை.
உதயநிதி பாஜகவுடன் அண்டர் டீலிங்கில் இருப்பதை தோலுரித்து காட்டுவோம். விஜய் ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக மேற்கொண்ட முயற்சியின் முக்கிய புள்ளியாக உதயநிதி இருந்தார். திமுகவால் காங்கிரசும் தோற்று 18 எம்எல்ஏக்களில் இருந்து 5 ஆக குறைந்து விட்டோம். சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்து விட்டோம். வரும் காலங்களில் உதயநிதி தலைமையில் திமுக மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும்.
கூட்டணி ஆட்சியும், நேர்மையான ஆட்சியும் காங்கிரஸின் இரு கண்கள். முதல்வர் விஜய் - ராகுல் காந்தி இடையிலான நல்ல நட்பு அனைவரும் அறிந்தது. இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்.
நெடுஞ்சாலைத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறைகளில் இருந்த 36 சதவிகித கமிஷன், பத்திரப்பதிவு செய்ய ஒரு ஏக்கருக்கு திமுக பெற்ற ரூ.7 லட்சம் நன்கொடை ஆகியவை தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதே போல் பல துறைகளில் ஊழல் குறைந்து வருகிறது. திமுக வாங்கிய கமிஷனை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட்டணி தர்மத்திற்காக அதை வெளியில் சொல்லவில்லை.
பாஜக அனைத்து தில்லாலங்கடி வேலைகளை செய்தும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாததால், பெயரை, உடையை மாற்றி அண்ணாமலையை இறக்கி விட்டுள்ளனர். அண்ணாமலையின் புதிய கட்சி ஆர்.எஸ்.எஸ்ஸின் பி பிளான். புதிய முகமூடியுடன் வந்துள்ள அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள். ராஜினாமாவை ஏற்றுக் கொண்டோம் என பாஜக இதுவரை கடிதம் மூலம் அறிவித்தது இல்லை. போலிகளை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.
அதிமுக வரலாறாக மாறிக்கொண்டிருப்பது வருத்தமான விஷயம். விருதுநகர் மாவட்டத்தில் கட்சியை முடித்தது ராஜேந்திர பாலாஜி என்றால், தமிழகத்தில் மொத்தமாக முடித்து வைத்த பெருமை பழனிச்சாமியை சாரும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா இந்த துரோகத்தை மன்னிக்காது.
உதயநிதியால் பழுதடைந்த தமிழக அரசு இயந்திரத்தை சரி செய்ய கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். பினராய் விஜயனும், பாஜகவும் ரகசிய கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது கேரள காங்கிரஸ்காரர்களின் எண்ணமாக இருந்தது. அதையே பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் கடிதத்துக்கு நாங்கள் ஜனநாயகப்பூர்வமாக பதில் அளிப்போம். பாஜக எதிர்ப்பு அரசியலில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.
நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணி, இண்டியா கூட்டணி, பாஜக பி டீம் என 3 அணிகள் உள்ளன. பாஜக பி டீமில் புதிதாக ஒரு கட்சி விரைவில் சேர்ந்து விடும். ஜீன் 8-ல் நடைபெறும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்ததன் மூலம், அக்கட்சி பாஜகவின் பீ டீம் என்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.