வேளச்சேரியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா.
சென்னை: வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வேளச்சேரி 176-வது வார்டில் எம்ஜிஆர் நகர், தேவி கருமாரியம்மன் நகர், கோல்டன் அவின்யு, விஜய நகர், சீனிவாசன் நகர், வஉசி, குபேர நகர், ஏஜிஎஸ் காலனி பகுதியில் நேற்றுவீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அவருடன் திமுக பகுதி செயலாளர் வே.ஆனந்தம், மாவட்ட பொருளாளர் பாஸ்கர், விசிக இளயா, மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜய தனசேகர், மதிமுக மாவட்ட செயலாளர் சுரேஷ், திமுக வட்ட செயலாளர் தாமோதரன், காங்கிரஸ் பகுதி தலைவர் ஜேம்ஸ், குரியா, வட்ட தலைவர் ராமதாஸ் ரவி மற்றும் கூட்டணி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பின்போது அசன் மவுலானா, ‘‘இந்த 5 ஆண்டுகளில் வேளச்சேரி தொகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்கள் பார்த்துள்ளீர்கள். குறிப்பாக வெள்ளச்சேரியை வேளச்சேரியாக ஆக்குவோம் என்று வாக்குறுதி அளித்தோம். மழைநீர் வடிகால் அமைத்து, அதேபோல் மாற்றி காட்டிவிட்டோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் மிகப்பெரிய மாற்றத்தை வேளச்சேரி தொகுதி அடையும். இப்போதுள்ள 50 ஆண்டுகால பழைய கழிவுநீர் வடிகாலுக்கு பதிலாக, புதிய கழிவுநீர் வடிகால் அமைக்கப் படும். எப்போது வேண்டுமானாலும் என்னை செல்போனில் தொடர்பு கொள்ளலாம். உடனுக்குடன் தொகுதி பிரச்சினை தீர்க்கப்படும்’’ என்று கூறி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்