“நாங்கள் கட்டுக் கோப்பாக இருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டே இருந்த திமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் கொளுத்திப் போட்ட ‘ஆட்சியில் பங்கு’ நெருப்பு இப்போது, “எங்களுக்கு 41 தொகுதிகள் வேண்டும்” என்ற கட்டத்தில் வந்து நிற்கிறது.
கடந்த முறை திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18- தொகுதிகளை மட்டுமே கையகப்படுத்தியது. இந்த நிலையில், இம்முறை காங்கிரஸ் கோட்டாவை 20 தொகுதிகளுக்குள் நிறுத்துவிட வேண்டும் என திட்டம் வைத்திருந்தது திமுக தலைமை. அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் “ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் தொண்டனின் உரிமை” என்று பேச ஆரம்பித்தார்கள்.
இவர்களின் எண்ணமும் செயலும் திமுக-வை சீண்டிப் பார்க்கும் விதமாகவே இந்த நிமிடம் வரைக்கும் இருக்கிறது. வெளிப்படையாகச் சொல்வதானால், இவர்கள் எல்லாம் தவெக-வை காட்டி அறிவாலயத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்கள். அதேசமயம், செல்வப்பெருந்தகை, சிதம்பரம் போன்றவர்கள் திமுக கூட்டணியில் இருப்பது தான் காங்கிரஸுக்கு பாதுகாப்பு என்ற கருத்தை டெல்லி வரைக்கும் சொல்லிவிட்டார்கள்.
காங்கிரஸார் பலவாறு குடைச்சல் கொடுத்தாலும் அவசரப்பட்டு எதிர்வினையாற்றாமல் அமைதியாகவே இருந்தது திமுக. ஆனால் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து திமுக-வினரும், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதெல்லாம் ஆகாத வேலை” என்று பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்கள். அதேசமயம், கூட்டணிக்குள் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளும் இப்படி வார்த்தை யுத்தம் நடத்துவதால் கூட்டணிக்கு பங்கம் வந்துவிடக் கூடாதே என திமுக பதறிய அளவுக்கு டெல்லி காங்கிரஸ் தலைமை இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் இன்னமும் காங்கிரஸார் ஆளாளுக்கு திமுக-வை அதிரடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். “காங்கிரஸுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், கிரிஷ் சோடங்கர், மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் தேவையற்ற குழப்பங்களை விளைவிக் கிறார்கள்” என கனிமொழி சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்ட ராகுல், “காங்கிரஸுக்கு இம்முறை 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்ததாகச் சொல்கிறார்கள். ராகுலின் இந்த டிமாண்டைக் கேட்டு அறிவாலயத் தலைவர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள்.
இதுகுறித்து திமுக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும் விஷயத்தில் இம்முறை மிகவும் கவனமாக இருக்கும் திமுக தலைமை, காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகள் குறித்தும் தனியாக ஒரு சர்வே எடுத்திருக்கிறது. அதில் 12 பேரின் செயல்பாடுகள் சொல்லிப் பெருமைப்படும்படியாக இல்லை. இவர்களுக்கெல்லாம் மீண்டும் சீட் கொடுத்தால் நிச்சயம் அங்கெல்லாம் அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும் என்ற தகவலும் இருப்பதால் இம்முறை காங்கிரஸுக்கு கூடுதல் சீட்களை வழங்கும் முடிவில் தலைவர் ஸ்டாலின் இல்லை. டெல்லி தலைமை ரொம்ப அழுத்தம் கொடுத்தால் ஒன்றிரண்டு தொகுதிகள் வேண்டுமானால் கூடுதலாக ஒதுக்கப்படலாம். அவர்கள் கேட்கும் அளவுக்கெல்லாம் தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பே இல்லை. அதேபோல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கேட்பதை எல்லாம் காங்கிரஸார் மறந்துவிட வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு பொதுச் செயலாளர் செல்வத்திடம் கேட்டதற்கு, " ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதைத் திமுக-விடம் வலியுறுத்தி வருகிறார் கிரிஷ் சோடங்கர். மற்றபடி, 41 சீட்கள் மற்றும் ராஜ்ய சபா சீட்களை காங்கிரஸ் கேட்பதாக வெளியாகும் தகவல்கள் எல்லாம் வெறும் வதந்திகளே” என்றார்.
கடைசியாக கிடைத்த தகவல்படி, காங்கிரஸுக்கு 28 தொகுதிகளை ஒதுக்குவது குறித்தி திமுக தலைமையில் ஆலோசனை நடப்பதாகச் சொல்கிறார்கள். தவெக பக்கம் போகலாம் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் சொல்வதைப் போலவே, ‘காங்கிரஸ் போனால் போகட்டுமே’ என மனநிலையில் திமுக-விலும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் 2 கட்சிகளிலுமே, ‘காரியம் கெட்டுவிடக் கூடாதே’ என்று துடிப்பவர்கள் தான் ‘இந்தக் கூட்டணி தொடர வேண்டுமே’ எனப் பதறுகிறார்கள். யார் பக்கம் ஜெயமாகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். - வே.கோபாலகிருஷ்ணன்