செந்தில் பாலாஜி | அசோக் குமார்
சென்னை: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு, காவல் துறை விசாரணை அதிகாரி முன் தினமும் இரு வேளையும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, “குதிரை பேரம் பேசியதாக கூறப்படும் தொலைப்பேசி பேச்சுகள் பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசை கவிழ்க்க சதி என யூகத்தின் அடிப்படையில் புகார் கூறியுள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் அரசு கவிழாது. சபாநாயகருக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவளித்தனர். தற்போது எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். அசோக் குமார் தான் தூண்டினார் என குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால், திருநாவுக்கரசு ஈரோடில் இருந்த நாளில் அசோக் குமாரும் இருந்தார் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை. இருவரும் சந்தித்தார்களா, இல்லையா என்பதை வழக்கில் சொல்லவில்லை” என வாதிட்டார்.
மேலும், “கரூர் சம்பவம் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், இடைத்தேர்தலில் கட்சிக்காக பணியாற்றுவதை தடுக்க வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த பணமும் வழங்கவில்லை;. மக்கள் பிரதிநிதியாக உள்ள நான் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக” என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அசோக் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமரேசன், “எப்போதெல்லாம் சகோதரர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறதோ, அந்த வழக்குகளில் அசோக் குமாரை சேர்த்து விடுகிறார்கள். ஏற்கெனவே ஒரு செய்தியாளர் இது சம்பந்தமாக பேசியதாக புகாரில் கூறிய நிலையில், அது குறித்து எந்தப் புகாரும் அளிக்கவில்லை.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோர முடியாது. 108 உறுப்பினர்கள் உள்ளனர். 35 கோடி குதிரை பேரம் என்பது யூகம் தான். சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது” என வாதிட்டார்.
மேலும், “திமுகவுக்கு 59 எம்.எல்.ஏ.க்கள், அதிமுகவுக்கு 47 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் ஆளும் தவெகவுக்கு காங்கிரஸ், வி.சி.க., இரண்டு கம்யூனிஸ்டுகள் என எல்லாரும் ஆதரவாக உள்ளனர். 59 பேர் உள்ள திமுக எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், “குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் இருவர் கரூரைச் சேர்ந்தவர்கள். புலன் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜூன் 25, 26, 27-ஆம் தேதிகளில் கிண்டி தனியார் ஓட்டலில் சந்தித்து பேசியுள்ளனர். திருநாவுக்கரசு, வேறு காரணத்துக்காக புகார்தாரரான எம்.எல்.ஏ. இளையராஜாவுடன் பேசியதாகக் கூறியுள்ளார். குற்றச்சதிக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜிக்கும், அசோக் குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இருவருமே ஆஜராகவில்லை. இது சாதாரணமான வழக்கல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை அணுகியுள்ளனர். அசோக் குமார் தொடர்பு உள்ளதற்கு ஆரம்பகட்ட ஆராதங்கள் உள்ளன. ஹவாலா பணம் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது. புலன் விசாராணை ஆரம்பகட்டத்தில் உள்ளது” என தெரிவித்து, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தினமும் காலை, மாலை காவல் துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.