தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாமக, நாதக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் விஜய்யின் வேட்புமனு ஆவணங்களில் சான்றொப்பம் காலாவதியான நோட்டரி வழக்கறிஞரிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக கூறி பாமகவினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.
அத்துடன் அவர் சொத்து வரி செலுத்தவில்லை என்றும் கூறி அவரது மனுவை நிராகரிக்க வாதாடினர். இதையடுத்து பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா இரு தரப்பினரிடையேயும் ஆவணங்களை சமர்பிக்குமாறு தெரிவித்தார். இறுதியாக, நோட்டரி வழக்கறிஞர் தொடர்பான உரிய ஆவணங்களைத் தவெகவினர் சமர்ப்பித்தனர். அதனை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர், சொத்து வரி நிலுவை போன்ற காரணங்களுக்காக வேட்புமனுவை நிராகரிக்க முடியாது எனத் தெரிவித்து விஜய்யின் மனுவை ஏற்றுக்கொண்டார்.
இதேபோல் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக கூறி, அவரது மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டது. அவருக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர்கள் முரளி வினோத் மற்றும் தேவராஜன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆதவ் அர்ஜுனாவின் வைப்பு நிதியில் உள்ள ரூ.2 கோடிக்கு ரூ.84 லட்சம் வரை வட்டி வருவதை, அவர் வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பிறகு அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரியம் வில்சனின் மனுவில் சில விவரங்கள் பூர்த்தி செய்யப்படாததால் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, அவரது மனுவும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.