பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுகந்தன் தலைமையிலான குழுவினர் திருமாந்துறை பிரியாணி கடையில் ஆய்வு மேற்கொண்டனர்

 
தமிழகம்

பெரம்பலூர் அருகே உணவில் பூச்சி இருந்ததாக புகார் - பிரியாணி கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

எஸ்.ஸ்டாலின்

பெரம்பலுார்: பிரியாணியில் வண்டு, ஐஸ்கிரிமில் ஈ கிடந்ததாக புகார் எழுந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், கடையின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர். இதையடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

சென்னை கொளத்துார் தெற்கு மாட தெரு பகுதியை சேர்ந்தவர் மாலிக் பாட்ஷா (27). இவர், கடந்த 13ம் தேதி குடும்பத்துடன் சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றுள்ளார். காலை 11.10 மணியளவில் பெரம்பலுார் மாவட்டம் திருமாந்துறை டோல்கேட் அருகில் சம்சுதீன் என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையில் குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

அப்போது, பிரியாணியில் வண்டு இறந்து கிடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாலிக் பாட்ஷா கடை மேலாளரிடம் கூறியுள்ளார். அப்போது, முறையாக பதிலளிக்கவில்லை என தெரிகிறது. பின்னர், அதே கடையில் ஐஸ்கிரீமும் வாங்கியுள்ளார். அதில், ஈ இறந்து கிடந்துள்ளது. பிரியாணியில் வண்டு இறந்து கிடந்ததையும், ஐஸ்கிரீமில் ஈ கிடந்ததையும் வீடியோ பதிவு செய்துள்ளார்.

அப்போது, கடை ஊழியர்கள் மாலிக் பாட்ஷாவிடம் வீடியோ பதிவை அழிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, மாலிக் பாட்ஷா மங்கலமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, மங்கலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூரில் தனியார் பிரியாணி கடையில் உணவில் இறந்து கிடந்த வண்டு மற்றும் ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த ஈ.

மேலும், மாலிக் பாட்ஷா பெரம்பலுார் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் புகாரும் கொடுத்துள்ளார். இது மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக்கின் கவனத்துக்கும் சென்றுள்ளது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நேற்று மாலை சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு தயாரிப்பு, சேமிப்பு, பராமரிப்பு, சுகாதார நடைமுறைகள், உணவு கையாளும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் பிரியாணி கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை சரி செய்து, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார தரநிலைகளை பூர்த்தி செய்து, தகுதி அலுவலரிடம் அனுமதி பெற்ற பின் பிரியாணி கடைக்கு உரிமம் வழங்கப்படும் என்று அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர். உரிமம் ரத்து செய்யப்பட்டதையடுத்து பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT