“தேர்தல் களத்தில் 4 பேர் இருப்பதாக கூறுகின்றனர். இதில், இரண்டு பேர் இதுவரை சட்டமன்றம் செல்லாதவர்கள். ஆகவே, இந்தத் தேர்தலில் போட்டி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் தான்” என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தை வளர்ச்சி அடைந்த முதல் மாநிலமாக மாற்றியவர் பழனிசாமி என்று மக்களே கூறுகின்றனர். தேர்தல் களத்தில் 4 பேர் இருப்பதாக கூறுகின்றனர். இதில் 2 பேர் இதுவரை சட்டமன்றம் செல்லாதவர்கள்.
ஆகவே, இந்தத் தேர்தலில் போட்டி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் தான். இரண்டு ஆட்சியையும் மக்கள் எடை போட்டுப் பார்க்க வேண்டும். இப்போது விளம்பரத்தாலே பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால், உண்மை என்ன என்பது தமிழக மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். காவிரியை காவு கொடுத்ததும் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததும் யார்? காவிரியை மீட்டுக் கொடுத்ததும் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் யார் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும்.
பழனிசாமி கொண்டு வந்த காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை ஸ்டாலின் கிடப்பில் போட்டார். அதேபோல 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை கிடப்பில் போட்டார். குடிமராமத்து திட்டத்தை முடக்கினார். ஸ்டாலினின் காலை உணவு திட்டத்தில் தற்போது 40 சதவீத மாணவர்கள் குறைந்துவிட்டதாக அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. இது மாணவர்கள் மீதான அக்கறையில் கொண்டு வந்த திட்டமா... அல்லது விளம்பரத்துக்காக கொண்டு வந்த திட்டமா என்று தெரியவில்லை.
இந்தியாவிலேயே கடன், பாலியல் வன்கொடுமை, சட்டம் - ஒழுங்குசீர்கேட்டில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றி தலைகுனிய வைத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மின் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி விட்டனர். வரும் தேர்தலில் உதயநிதியை முதல்வராக அரியணையில் அமர்த்துவதே திமுக-வின் லட்சியமாக உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசின் அறிவிப்பு, எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் கோரிக்கை என எதையும் செயல்படுத்த மாட்டேன் என்று சர்வாதிகாரியாக ஸ்டாலின் செயல்படுகிறார். தங்களது இயலாமையை நியாயப்படுத்துகிற வகையில் அவதூறு பிரச்சாரங்களை அள்ளித் தெளிக்கின்றனர். திமுக என்ற கொடுமையான வெயிலில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர். விரைவில் பழனிசாமியின் நிழல் மக்களுக்குக் கிடைக்கும். தங்களுக்குப் பணமும் அதிகார பலமும் இருப்பதாக ஸ்டாலின் நினைத்தால் அது பகல் கனவாகிவிடும். பழனிசாமிக்குப் பின்னால் எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் விசுவாசப் படை இருக்கிறது. தேர்தலில் திமுக வீழ்த்தப்பட்டு பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மலரும். இவ்வாறு அவர் கூறினார்.