மதுரை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்திற்கும் குறையாமல் இழப்பீடு வழங்க கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் ஓத்திவைத்தது.
விருதுநகரை சேர்ந்த விடியல் வீர பெருமாள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “சிவகாசியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும். 50 சதவீதம் தீக்காயம் அடைந்தவர்களுக்கு 15 லட்சம் ரூபாயையும், 25- 50 சதவீதம் தீக்காயம் அடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், 5-25 சதவீதம் தீக்காயம் அடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், இழப்பீடாக வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு கல்வி உள்ளிட்ட மறுவாழ்வு வசதிகளை செய்து தரவும், விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் முறையாக ஆய்வு செய்து விதிகள் மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு, "ஒரே கோரிக்கைக்காக பல மனுக்கள் தாக்கல் செய்வது தேவையற்றது. இது சில நேரங்களில் சிலர் விளம்பரத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாகி விடுகிறது என அறிவுறுத்தி, பட்டாசு ஆலை விபத்து தொடர்பான வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.