பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நேற்று நிறுத்தப்பட்டதால், பூங்கா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டம். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் நேற்று 41 மின்சார ரயில் சேவைகள் ரத்தால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அதே நேரத்தில், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை நோக்கி மக்கள் சென்றதால், அங்கு கூட்டம் அலை மோதியது.
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி காரணமாக, 41 மின்சார ரயில்களின் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, நேற்று காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அந்த நேரத்தில், ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ரயில் ரத்து அறிவிப்பால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். காலை 10.30 மணிக்கு மேல் ரயில்கள் ரத்து செய்யப்படுவதை முன்பே அறிந்து, பணிக்கு செல்பவர்கள் மற்றும் சொந்த வேலைக்காக செல்பவர்கள் முன்னதாக திட்டமிட்டு ரயில் நிலையங்களுக்கு சென்றனர்.
இதனால், காலை நேரங்களில் தாம்பரம், எழும்பூர் உள்பட பல ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதன்பின், ரயில் ரத்தானது தெரியாமல் பலர் ரயில் நிலையங்களுக்கு சென்றனர்.
பின்னர், ரயில் ரத்து குறித்த அறிவிப்பை கேட்டு, அவர்கள் பேருந்து மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கு சென்றனர். இதனால், அங்கு கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்தது.
மின்சார ரயில் ரத்தால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. மேலும், சில பயணிகள் தங்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வெளியே சென்று வந்ததை காண முடிந்தது. இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நிலவியது.
இதுபோல, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ஒரு மணி நேரத்துக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதால், அந்த ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணித்தனர்.
தொடர்ந்து, மாலை 3.30 மணிக்கு மேல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்ற தகவல் அறிந்து மாலை 3 மணி முதலே ரயில் நிலையத்தில் ரயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர். மாலை 4 மணி முதல் வழக்கம்போல மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.