“தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ், தேமுதிக-வுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்போது எங்களுக்கு மட்டும் ஏன் ஒதுக்க முடியாது?” என கம்யூனிஸ்ட் கட்சிகள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளன.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறியாக நீடித்து வருகிறது. இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் 3 கட்டமாகவும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் 2 கட்டமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த முறையை விட இம்முறை கூடுதலான தொகுதிகளை இரு கட்சிகளும் கேட்டு வரும் சூழலில், தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகளின் வரவைக் காரணம் காட்டி, தொகுதிகளை குறைத்துக்கொள்ளுமாறு திமுக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இரண்டு கம்யூனிஸ்ட்களும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் காரல் மார்க்சின் 143-வது நினைவு தினத்தையொட்டி, கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் நேற்று மரியாதை செலுத்தினர். அப்போது மார்க்சிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர் களிடம் பேசுகையில், “திமுக-வுடனாக தொகுதிப் பங்கீடு குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த ஒரு சில நாட்களில் தொடரும்.
இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. ஆனால், புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகளை தருவது சிரமம் என திமுக சொல்கிறது. இதே சிரமத்துக்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. தேமுதிக-வுக்கும் கூடுதலாக தொகுதிகள் வழங்கப்படும் என செய்திகள் வருகின்றன.
இவர்களுக்கு எல்லாம் கூடுதல் தொகுதிகள் கொடுக்க வாய்ப்பிருக்கும் போது, இடதுசாரிகளுக்கு கூடுதல் தொகுதிகளை தர முடியாது என்று சொல்வது நியாயம் இல்லை. எனவே, கடந்த முறையை விட கூடுதலான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களுடைய முடிவு.
கடந்த முறையை விட குறைத்து 5 தொகுதிகள் தான் வழங்கப்பட்டால், அப்போது கட்சியின் மாநிலக் குழுவை கூட்டி, உரிய முடிவை எடுப்போம். மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுவதும் மிகவும் முக்கியம்” என்றார்.
தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறோம். இப்போது அதிகமான கட்சிகள் கூட்டணியில் சேர்ந்திருப்பதால், நீங்கள் ஒன்றை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் முன்மொழிகிறார்கள். நாங்கள் ஏற்கெனவே இருந்த இடங்களுடன் கூடுதலாக தரவேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். திமுக-வுக்கு சிரமம் இருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால், நாங்கள் எங்களுக்குரிய இடங்களைக் கேட்கிறோம்.
கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நாளை (இன்று) கூடுகிறது. தொகுதிகளை குறைத்து கொடுத்தாலும் ஏற்கத் தயாரா என்றால் அது சூழலைப் பொறுத்தது. எத்தகைய முடிவாக இருந்தாலும் அது கட்சி எடுக்கிற முடிவு தான். அந்த முடிவை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் சொல்வோம்.
சட்டப்பேரவையில், நாடாளுமன்றத்தில் எங்களது எண்ணிக்கை அதிகரிப்பது என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லது. இதை அனைவரும் உணர்வார்கள் என்று நம்புகிறோம். பாஜக-வை வீழ்த்துவது தான் எங்களது இலக்கு.
பாஜக அதிகாரத்தில் நீடிக்கக் கூடாது. அந்தவகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று, பாஜக அங்கம் பெறுகிற கூட்டணியை வீழ்த்துவோம்” என்றார்.