தமிழகம்

ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஆவின் பச்சை பால் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளது. அண்மைக் காலமாக ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் ‘ஆதார் அட்டை’ வழங்க வேண்டும் என கெடுபிடி காட்டப்படுகிறது.

ஆதார் அட்டை வழங்காதவர்களுக்கு பால் இல்லை என மறுக்கப்படுகிறது. ஆவின் பால் விற்பனை செய்யும் சிறு கடைகளுக்கு, ஆவின் பால் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவின் பால் வாங்கும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT