மு. வீரபாண்டியன் |கோப்புப் படம் 

 
தமிழகம்

6 தொகுதிகளுக்கு குறையக் கூடாது: இந்திய கம்யூ. செயற்குழு திட்டவட்டம்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் நேற்று முக்கியமான மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் 32 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தரப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ள நிலையில், அதனை ஏற்க கட்சி நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டதைச் சுட்டிக்காட்டிய நிர்வாகிகள், இந்த முறையும் 6 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

          

திமுக கூட்டணியில் இந்த முறை கூடுதல் கட்சிகள் இடம்பெற்றிருப்பதால், கூட்டணிக் கட்சிகள் தலா ஒரு இடத்தைச் சுருக்கிக் கொள்ள வேண்டும் என திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தைக் குறைக்க திமுக முயன்று வருகிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் உயர்மட்டக் குழுவினருடன் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ தொகுதிப் பங்கீடு தொடர்பாக எவ்விதமான கடுமையான நிபந்தனைகளையும் நாங்கள் விதிக்கவில்லை. பரஸ்பரம் சுமூகமான முறையிலேயே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எவ்விதமான மோதல் போக்கும் இல்லை’’ எனத் தெரிவித்தனர்.

நேற்றைய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழு மீண்டும் கூடவுள்ளது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, இன்று நண்பகல் 12 மணிக்குள் திமுகவுடனான தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT