பெ.சண்முகம் | மு.வீரபாண்டியன்
சென்னை: இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று அறிவிக்க உள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, தவெக ஆகிய பிரதானக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தரப்பில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அதில் இணையாமல், வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு என தெரிவித்ததோடு, மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதையொட்டி இரு கட்சிகளும் தொடர்ந்து விவாதித்தும் வருகின்றன.
இதற்கிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில், மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர், உறுப்பினர்களுடன் பங்கேற்று இடைத்தேர்தல் குறித்து கலந்துரையாடினார். இன்றும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் முடிவில் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நேற்று காணொலி வாயிலாக செயற்குழுக் கூட்டம், தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இடைத்தேர்தல் தொடர்பாக திருச்சியில் இன்று அவசர மாநிலக் குழு கூட்டத்தை கூட்டுகிறோம். அதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.