தமிழகம்

தமிழகத்தில் 70 லட்சம் பேருக்கு பாதிப்பு: உணவுப் பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவுக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு

தமிழினி

சென்னை: ‘ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் மட்டும் அந்தியோதயா அன்னயோஜனா அட்டை வைத்திருக்கும் 18,64,000 குடும்பங்களும், சுமார் 70 லட்சம் மக்களும் பாதிக்கப்படுவார்கள்’ என மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் (NSA) அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்படி (AAY) பயனாளிகளுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கி வரும் குடும்பத்திற்கு 35 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை என்பதை மாற்ற திட்டமிட்டிருக்கிறது.

அதன்படி நபர் ஒருவருக்கு 7 கிலோ என்கிற வகையில் கொடுக்கப்படும் என்றும் ஒரு நபராக இருந்தால் 7 கிலோ, இரண்டு நபர் குடும்பத்திற்கு 14 கிலோ, நான்கு நபர் குடும்பத்திற்கு 28 கிலோ, 5 நபருக்கு மேல் இருந்தாலும் அந்த குடும்பத்திற்கு 35 கிலோ மட்டுமே என்று மாற்ற திட்டமிட்டிருக்கிறது.

இந்த திட்டத்தின்படி அந்தியோதயா அன்னயோஜனாவிற்கு மாநிலங்களுக்கு வழங்கப்படும் 99 லட்சம் டன் என்பது குறைக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நபர் வாரி என்றால் 5 பேருக்கு அதிகமாக இருந்தால் அதை அதிகரித்து தர வேண்டும். ஆனால், அதற்கு மாறாக உச்சவரம்பு 35 கிலோ என்று வைத்துவிட்டு குறைப்பது என்பது மிகவும் வறுமையிலும், ஆதரவற்ற நிலையிலும் இருக்கக் கூடிய தனி நபர்கள் அல்லது வறுமையில் உழலும் குடும்பங்களை வெகுவாக பாதிக்கும்.

இதன் மூலமாக தமிழகத்தில் மட்டும் அந்தியோதயா அன்னயோஜனா அட்டை வைத்திருக்கும் 18,64,000 குடும்பங்களும், சுமார் 70 லட்சம் மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதுபோன்று அனைத்து மாநிலங்களுமே பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. 2011-12-க்கு பிறகு தனிநபர் உணவு நுகர்வு குறித்த கணக்கீடுகள் நடத்தப்படவில்லை.

விலைவாசி நுகர்வு குறியீட்டு எண்ணை மாற்றி அமைப்பதற்காக 2023-24 ஆம் ஆண்டில் தான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதே இந்த கணக்கெடுப்பு தொழிலாளர்களையும் அரசிடமிருந்து இலவசமாக உணவு பெறும் குடும்பங்களையும் பாதிக்கும் என்று சொல்லப்பட்டது இப்போது அது உண்மையாகியிருக்கிறது.

இந்தியாவில் பன்முக வறுமை (Multidimensional Poverty) விகிதம் 16.96 சதவிகிதம். இந்நிலையில் உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் அமலுக்கு வருமானால் நிச்சயமாக பல மாநிலங்களில் பன்முக வறுமை நிலை விகிதம் அதிகரிக்கக் கூடும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபத்தில் உச்சவரம்பு வைக்காத பாஜக அரசு ஏழை, எளிய ஆதரவற்ற மக்களின் சாப்பாட்டு தட்டில் இருக்கும் உணவுக்கு உச்சவரம்பு விதிப்பது கொடூரமான செயலாகும்.

எனவே, ஒன்றிய பாஜக அரசு உணவுப் பாதுகாப்பு திருத்தச் சட்ட வரைவில் உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திருத்தங்களை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைக்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்குவது தொடர வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை கடந்த ஜூன் 24-ம் தேதி வெளியிட்ட 2026-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்ட வரைவின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

2013-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருள் உரிமைகளை குறைப்பதற்கு இத்திருத்தம் வகை செய்கிறது.

தற்போதைய நடை முறையின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக மொத்தம் 35 கிலோ கிராம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, நபர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 7 கிலோ கிராம் உணவு தானியங்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளது. இது ஏழைக் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும். தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே உள்ளது. இத்திருத்தம், நடைமுறைக்கு வந்தால் இத்தகைய குடும்பங்களுக்கு 35 கிலோ கிராம் உணவு தானியம் கிடைக்காது. குறைந்துவிடும்.

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு இலவசமாக மாதம் தோறும் வழங்கும் வழங்கும் அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற 65,261 மெட்ரிக் டன் உணவு தானியங்கள், 42,040 மெட்ரிக் டன்னாகக் குறைந்துவிடும். இதனால் தமிழ்நாட்டில் 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் மூலம் பயன் பெறும் 69,26,983 ஏழை பயனாளிகள் பாதிக்கப்படுவர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 கிலோ கிராம் உணவு தானியத்தை மாதம் தோறும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கிடைத்து வரும் 35 கிலோ கிராமையும் குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.

இது ஏழைகளின் உணவு பாதுகாப்பிற்கு எதிரானது. எனவே, “2013ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (1)-ன் முதலாவது வரம்பு நிபந்தனைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்“ என தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு, கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதை ஒன்றிய பாஜக அரசு ஏற்க வேண்டும்.

ஏழைகளுக்கு எதிரான இத்திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT