லட்சுமணன், சுகந்தி
சென்னை: தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தொகுதிகளுக்கு தவெக, திமுக, அதிமுக. நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.
அதன்படி, தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. இதைத் தொடர்ந்து தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினர்.
தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தாலுகா குழு செயலாளர் ப.லட்சுமணனும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளருமான பி.சுகந்தியும் போட்டியிடுகின்றனர்.