பிரதிநிதித்துவப் படம்

 
தமிழகம்

தமிழகம் முழுவதும் வணிகர்களை வதைக்கிறதா வணிக வரித்துறை?

ந.முருகவேல்

விருத்தாசலம்: வணிக வரித்துறையின் சிறப்பு படையினரின் நடவடிக்கையால் வணிகர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் வணிக வரித்துறை சார்பில் தினமும் கடைகளில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு சுற்றும் படை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு சுற்றும் படை குழுவினர் தினமும் 4 வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ய வேண்டும். இந்த குழுக்கள் மூலம் ஒரு மாதத்தில் 350 ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிகர்கள் ஜிஎஸ்டி தொடர்பான பில், இ-வே பில் மற்றும் நிறுவன இருப்புகளை சரியாக வைத்து கொள்ளுமாறு, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் மூலம் வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர கடைகளில் துண்டு சீட்டு, எஸ்டிமேட் ஸ்லிப் ஆகிய பயன்பாடுகளை கவனமாக கையாள்வதை கண்காணிப்பது இவர்களது அன்றாட பணி.

அந்த வகையில் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சுற்றும் சிறப்பு படையினர் பிரதான சாலைகளில் சுங்கச்சாவடி அருகே தங்களது வாகனத்தை நிறுத்திக் கொண்டு, அவ்வழியாக செல்லும் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருள் எடுத்துச் செல்வதற்கான இ-வே பில், சரக்கு எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஆய்வு செய்து உரியரசீதுகள் இருப்பின் அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

ஆனால் நடைமுறையில் சரக்கு வாகனங்களை மறித்து சோதனை செய்யும் வணிக வரித்துறை அலுவலர்கள், ஓட்டுநர்களிடம் இ-வே பில் இருந்தாலும், அவர்களை மிரட்டும் தொனியில் பேசுகின்றனர்.

பேரம் பேசி படியாவிட்டால் அவர்களது வாகனத்துக்கு அபராதம் விதிக்கின்றனர். அபராதத்தை உடனடியாக செலுத்தவில்லை என்றால் வாகனத்தை காவல் நிலையத்தில் ஒப்படைப்போம் என்று மிரட்டும் தொனியில் பேசி, அச்சுறுத்துவதாக சரக்கு வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு மாட்டுத் தீவனங்களை ஏற்றிச்சென்ற லாரி ஒட்டுநரிடம் கெடுபிடி செய்ததாக மாட்டுத் தீவன முகவர் ஒருவர் கூறினார். “எங்கள் பக்கம் தவறு இருந்தால், அதற்கான அபராதத்தை செலுத்த தயாராக உள்ளோம்.

ஆனால் தாறுமாறாக அபராதம் விதிப்பது தான் கொடுமை. அபராதம் விதிக்கும்போதும், பேரம் பேசும் போதும் வாகன கேமராவை திருப்பி வைத்து விடுகின்றனர்” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக வணிக வரித்துறையின் வணிகர் நலக்குழு உறுப்பினரும், கடலூர் மண்டல வர்த்தக சங்கத் தலைவருமான சண்முகம் கூறுகையில், “வணிகர்கள் ஏற்கெனவே மிகுந்த சோதனையை சந்தித்து வருகின்றனர்.

வாகன எரிபொருள் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம், அதிக பாரம் என காவல்துறைக்கு கப்பம் என பல்வேறு இன்னல் களைத் தாண்டி தான் வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளனர்.

அவர்களை வணிவரித்துறையும் வதைப்பது எந்த விதத்தில் நியாயம்? எனவே வணிக வரித்துறை அதிகாரிகள், வணிகர்களிடம் கனிவோடு நடந்துகொள்ள அறிவுரை வழங்க வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக வணிக வரித்துறை அதிகாரியிடம் பேசியபோது, “மிரட்டும் தொனியில் யாரும் பேசக்கூடாது. மேலும் உரிய அபராதம் மட்டுமே விதிக்க வேண்டும். இ-வே பில் காண்பித்த பிறகும் அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது தவறு. இதுதொடர்பாக யாரேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனறார்.

SCROLL FOR NEXT