நயினார் நாகேந்திரன்
சென்னை: "சட்டப்பேரவையில் அப்பாவை தேடுகிறார். வீட்டில் அம்மாவிடம் கேட்டால் தான் அப்பா யார் என்று தெரியும். இவர்கள் சட்டப்பேரவைக்கு வந்து அப்பாவைத் தேடினால் யாருக்குத் தெரியும்?" என நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
'ஒரே நாடு' மாத இதழ் மற்றும் டிஜிட்டல் பதிப்பு தொடக்க விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு 'ஒரே நாடு' மாத இதழ் மற்றும் டிஜிட்டல் பதிப்பை தொடங்கி வைத்து, இதழை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கவிதைகளில் பல வகைகள் உள்ளன. புதுக்கவிதை, பழைய கவிதை எனப் பல உண்டு. நான் கல்லூரியில் படிக்கும்போது படித்த ஒரு கவிதை இப்போதும் என் நினைவுக்கு வருகிறது. “செத்த மாட்டுத் தோலினால் பறை செய்யலாம். செத்த மாட்டுத் தோலினால் செருப்புச் செய்யலாம். செத்த மாட்டுத் தோலினால் ஆடை நெய்யலாம். ஆனால், செத்த மனிதன் தோலினால் என்ன செய்ய முடியும்?” இன்றைக்கு அப்படிப்பட்ட மனிதர்கள் ஆட்சி செய்யக்கூடிய சூழல் இங்கே நிலவுகிறது.
இவர்களால் இந்த நாட்டுக்கு என்ன பயன்? சட்டப்பேரவைக்கு சென்று, 'அப்பா எங்கே? அப்பா எங்கே?' என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யாரென்று சொல்லுவார். ஆனால், இவர்கள் சட்டப்பேரவைக்கு வந்து அப்பாவைத் தேடினால் யாருக்குத் தெரியும்? இப்படிப்பட்டவர்களின் ஆட்சிதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
பிரதமர் செய்துள்ள சாதனைகளை ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் அல்ல, ஒரு மாத காலம் கூடத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கலாம். அந்த சாதனைகள் அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், மக்கள் ஆதரவை வாக்கு வங்கியாக மாற்றுவதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சவால் நிலவுகிறது. கடந்த காலங்களில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தபோது, இடையில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், இந்த சூழலும் மாறி வரும் போது, தமிழகத்தில் இனி ஆளப்போகும் கட்சியாக பாஜக மட்டுமே இருக்கும். எனக்கு இதில் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.
அந்த நம்பிக்கையின் அடையாளம்தான் தஞ்சாவூரில் காவிரிப் பிரச்சினைக்காகக் கருப்பு முருகானந்தம் தலைமையில் 5000-க்கும் மேற்பட்டோர் திரண்ட ஆர்ப்பாட்டம். அதேபோல், சென்னையில் நடைபெற்ற தேசியக் கொடிப் பேரணி மிகவும் பிரம்மாண்டமாக அமைந்தது.
பாஜகவினர் சோர்ந்து போய்விட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். ஆனால், பிரிந்து சென்ற கல்யாண் சிங் போன்ற மாபெரும் தலைவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்பியதுதான் வரலாறு. அந்த வரலாறு தமிழகத்திலும் திரும்பும்.
நெல்லை, கன்னியாகுமரி என மாவட்ட வாரியாக அந்த மாற்றம் தொடங்கிவிட்டது. பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் வந்து இணையும் காலம் கனிந்துவிட்டது. பாஜக என்பது ஒரு அசைக்க முடியாத எஃகு கோட்டை. சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான இந்தக் கட்சியை யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
இன்றைக்குச் சிலர் 'வந்தே மாதரம்' முதலில் பாட வேண்டுமா அல்லது 'தமிழ்த்தாய் வாழ்த்து' முதலில் பாட வேண்டுமா என்று விவாதிக்கிறார்கள். இதில் பல கருத்துகள் இருக்கலாம். ஆனால், எவன் ஒருவன் தன் தாய் மீது உண்மையான பற்று வைத்திருக்கிறானோ, அவனால் மட்டுமே தன் தாய்நாட்டின் மீதும் பற்று வைக்க முடியும்.
அதேபோல், தன் தாய் மீது பற்றுள்ளவனே தன் தாய்மொழியை நேசிப்பான். எனவே, தாய், தமிழ், தாய்நாடு மற்றும் தேசம் ஆகியவற்றை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழையும் தேசியத்தையும் பாஜக ஒருபோதும் பிரித்துப் பார்க்காது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தவெக ஆதரவாளர் ஒருவர், சமூக வலைதளங்களில் தமிழ் கடவுள் முருகனையும், இந்து மத நம்பிக்கைகளையும் மிகக் கீழ்த்தரமான முறையில் இழிவுப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது. இதனை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.
மதநல்லிணக்கம் என்று வசனம் பேசும் முதல்வர் விஜய், தனது கட்சியின் ஆதரவாளர் இந்து கடவுள்களை ஆபாசமாகச் சித்தரிப்பதை கண்டும் காணாமல் மவுனம் காப்பது ஏன்? முருகப்பெருமானை இழிவுப்படுத்திய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.