அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: ‘வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவ சேவைகள் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குநர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார துறை அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், செயலர் தாரேஸ் அகமது எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. மழைக்காலங்களில் நோய் பரவல் தடுப்பு, உயிரிழப்பு தடுப்பு மற்றும் தடையற்ற மருத்துவ சேவை ஆகிய 3 செயல்பாடுகளையும் இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகள், இதய சிகிச்சைப் பிரிவுகள், பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகளில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகம் தடையின்றி செயல்படவும், குறைந்தது 7 நாட்களுக்கு தேவையான அவசரகால இருப்பை பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள், நரம்புவழி திரவங்கள், கிருமிநாசினிகள், வயிற்றுப்போக்குக்கான ஓஆர்எஸ் கரைசல்கள், பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகள், குளோரின் மாத்திரைகள் மற்றும் மருத்துவ நுகர்பொருட்கள் குறைந்தது 7 நாட்களுக்கு தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டும்.
வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நீண்டகால சிகிச்சை பெறுவோர் பாதுகாப்பான இடங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிரசவ காலம் நெருங்கியுள்ள கர்ப்பிணிகள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தங்குவதை தவிர்த்து, தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.