திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுவதை மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் பார்வையிட்டார்.

 
தமிழகம்

நெல்லையில் மழைக்கு 15 வீடுகள் சேதம்: ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கன மழையால் 15 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக கனமழை பெய்தது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் செல்வதை ஆட்சியர் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தற்போது மழை குறைந்துள்ளது. இருப்பினும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தில் நேற்று காலை 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 32,787 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா மற்றும் ராமநதி அணைகளிலிருந்து வரும் நீர், பாபநாசம் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட 12 ஆயிரம் கன அடி நீர் மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட 4 ஆயிரம் கன அடி நீர் ஆகியவையே நீர்வரத்து உயர்வுக்கு காரணம்.

அச்சப்பட தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் ஆற்றில் நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியை எட்டினால் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழல் அப்படியில்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 26 பேர் கொண்ட சிறப்புக்குழு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தயார் நிலையில் உள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வள்ளியூரில் நிறுத்தப்பட்டுள்ளனர். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ள பாதிப்புக்குள்ளாகக் கூடிய 72 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு ஜேசிபி இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மற்றும் மணல் மூட்டைகள் மற்றும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளன.

பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நீர்நிலைகளின் கரையோரங்களில் ஏற்படும் சிறு உடைப்புகளை சரிசெய்ய தயார் நிலையில் உள்ளனர். பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று (நேற்று) காலை நிலவரப்படி 131 அடியாக உள்ளது. இது அதன் மொத்த கொள்ளளவில் 87.76 சதவீதம் ஆகும்.

மஞ்சள் எச்சரிக்கை: நேற்று முன்தினம் காலை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மழை குறைந்ததால் மாலையில் அது மஞ்சள் எச்சரிக்கையாக மாற்றப்பட்டது. தற்போது மஞ்சள் எச்சரிக்கை மட்டுமே நடைமுறையில் உள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை வந்த 60 அழைப்புகளில், 50 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 20 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது நீர் வடிந்துள்ளது. நெற்பயிர்களின் சேதம் நீர் முழுமையாக வடிந்த பின்னரே கணக்கிடப்படும். வாழை சேதம் ஆரம்பத்தில் 1 லட்சம் என மதிப்பிடப்பட்ட நிலையில், அது குறைவாக இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் மழைக்கு 15 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. முழுமையாக வீடுகள் சேதம் ஏதும் இல்லை. மின்கம்பம் விழுந்ததில் ஒரு மாடு உயிரிழந்தது. ராதாபுரம் தாலுகாவில் கூரை வீடு இடிந்து விழுந்ததில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமாக உள்ளார். மாவட்டத்தின் ஒட்டுமொத்த சூழல் அமைதியாக உள்ளது என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT