கும்பகோணம்: “தவெக ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் என்பது காட்சியாக தெரிகிறது. ரியல் ஆட்சி இல்லாமல் ரீல்ஸ் ஆட்சியாக தான் இருக்கிறது. பாட்டிலுக்கு ரூ. 20 வாங்குவதும், நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வாங்குவதும் இப்போதும் உண்டா இல்லையா?. லஞ்சம் ஒழிப்பு என்று பெயரளவில் இருப்பதை செயல்படுத்தினால் வரவேற்போம்” என திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
திருவிடைமருதூரில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை கூட்டம் ஜனநாயக முறையில் நடைபெற்று வந்ததை நாம் பார்த்துள்ளோம். ஜனநாயகமே என்னவென்று தெரியாத ஆட்சி நடத்துகிறவர்கள், சட்டப்பேரவை நடத்துவதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் சிறந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் அரசியல் பாகுபாடின்றி, நிர்வாக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் சிறந்த தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது கொடுப்பது வழக்கம். இதுபோல் விருது வழங்குவது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊக்கமளிக்க கூடியதாக இருக்கும்.
ஆனால் அவர்களை அழைக்காமல் அந்த துறையின் மூத்த அதிகாரியிடம் மொத்தமாக ஒப்படைத்து அதை எடுத்துச் சென்று அவர்களிடம் ஒப்படைக்கச் செய்வது எந்த வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும். உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து நேரடியாக அவர்களை அழைத்து விருதுகளை வழங்காமல் இருப்பது ஜனநாயகம் மறுக்கப்படுவதாகும்.
தவெக ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் என்பது காட்சியாக தெரிகிறது. ரியல் ஆட்சி இல்லாமல் ரீல்ஸ் ஆட்சியாக தான் இருக்கிறது. படம் பிடிப்பது அதை காட்டுவது அவ்வளவு தான். எனக்கு செயல் தான் முக்கியம் சொல் அல்ல என்பது அவரது வேதவாக்கு. பாட்டிலுக்கு ரூ. 20 வாங்குவதும், நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வாங்குவதும் இப்போதும் உண்டா இல்லையா?.
லஞ்சம் ஒழிப்பு என்று பெயரளவில் இருப்பதை செயல்படுத்தினால் வரவேற்போம். செய்ய இயலாலதை நினைத்து கண்டிக்கின்றோம்.
கனிமொழி தேநீர் விருந்தில் கலந்து கொண்டதை அரசியல் உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்துகிறார்கள். எனவே, அதில் அவர் கலந்து கொண்டதில் தவறில்லை. அரசியல் உள்நோக்கம் இல்லை. உள்நோக்கம் கற்பிப்பவர்கள் இதை அரசியலாக்க பார்க்கின்றார்களே தவிர, அமைச்சர் நிர்மல்குமார் கூறியது போல், திமுக அந்த மனநிலை இல்லை.
காங்கிரஸ் அணி மாறிவிட்ட காரணத்தால், அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது, அந்த கூட்டத்திற்கு திமுக வருமா வராதா என கேள்வி கேட்பது, சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுவது, திமுக ஆதரிக்குமா ஆதரிக்காதா என்று பதம் பார்ப்பது.
திமுக எஃகு கோட்டை, எதிர்க்கட்சிகள் எந்த சதி விலை விரித்து, திமுகவிக்கு களங்கம் விளைவிக்க நினைத்தால், திமுக தலைவர் அதை உடைத்தெறிவார். எதிர்காலத்தில் தமிழகத்தை ஆளுவார் எனத் தெரிவித்தார்.