புதுச்சேரி: "எங்களின் பார்வையில் கோவை மெட்ரோ திட்டம் வீண் திட்டம். பல மாநிலங்களில் மெட்ரோ திட்டம் தோற்றுவிட்டது. மெட்ரோ என்று கூறி பெரிய தூண்களை நிறுத்தி நெரிசலை உண்டாக்குகின்றனர்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
புதுச்சேரியில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பிப்ரவரி 7-ம் தேதி எங்கள் கட்சியின் மாநாடு நடக்க உள்ளது. அதில் புதுச்சேரி, தமிழக வேட்பாளர்களை அறிவிப்போம். மாஹே, ஏனாம் வேண்டாம், மாநில உரிமை வேண்டும் என்பது தான் எங்களின் கொட்பாடு. ஆகவே மாஹே, ஏனாமில் போட்டியிட மாட்டோம். மீதமுள்ள இடங்களில் போட்டியிடுவோம்.
மதுவை அங்கீகரித்த மாநிலமாக புதுச்சேரி மாறிவிட்டது. மது வருவாயை அரசு பெரிதாக பார்க்கிறது. தமிழகமே அதை நம்பிதான் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது. மது விஷம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதனை விற்று வரும் பணத்தில் நலத்திட்டம் என்று பேசுவது பைத்தியக்காரத்தனம், அதனை ஏற்க முடியாது. தமிகத்தில் நாங்கள் வந்தவுடன் மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறினோம். அதுபோன்று புதுச்சேரியிலும் நாங்கள் வந்தால் மதுக்கடைகளை மூடுவதை செயல்படுத்துவோம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இருக்கிறது. இங்கு வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு மது பிடித்தமானதாக இருக்கிறது. அதனால் மதுக்கடைகளை மொத்தமாக மூட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும்.
நமக்கு தேவையான காவிரி நீரை பெற முடியவில்லை. மேகேதாட்டுவில் அணை கட்டினால் சுத்தமாக நமக்கு தண்ணீர் கிடைக்காது. மேகேதாட்டுவில் அணை கட்டும் அனுமதியை ஆட்சியாளர்கள் கொடுக்கின்றனர். காங்கிரஸ், பாஜக தான் அங்கு ஆளுகின்றன. தேச ஒருமைப்பாடு, இறையாண்மை எல்லாம் பேசுகின்றனர். கர்நாடகா என்று வரும்போது, அவர்கள் அங்கு மாநில கட்சியாக மாறிக்கொள்கின்றனர்.
எனவே மேகேதாட்டுவில் அணை கட்டுவது குறித்த கேள்வியை முதல்வர் ஸ்டாலினிடம் தான் கேட்க வேண்டும். பிஹாரில் இஸ்லாமியர்கள், பெண்களின் 81 லட்சம் வாக்குளை நீக்கிவிட்டார்கள். ரூ.25 ஆயிரம் கோடி நாட்டின் வளர்ச்சிக்கு என்று வாங்கி, அதில் ரூ.14 ஆயிரம் கோடியை பிஹார் என்ற ஒரு மாநில தேர்தலில், ஒரு கோடி பெண்களை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கு ரூ.10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தி வெற்றி பெற்றுவிட்டனர். அதுவே தமிழகத்திலும் நடக்கும் என்றால் ரூ.10 ஆயிரம் கொடுப்பார்களா அல்லது ரூ.15 ஆயிரம் கொடுப்பார்களா?
எங்களின் பார்வையில் கோவை மெட்ரோ திட்டம் வீண். பல மாநிலங்களில் மெட்ரோ திட்டம் தோற்றுவிட்டது. மெட்ரோ திட்டத்துக்கு ரூ.72 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். சாலையை சரியாக அமைத்து சிற்றுந்துகள் விடுவது, ஏற்கனவே இருக்கின்ற ரயில் போக்குவரத்தை சரியாக நடத்துவது ஆகியவையே போதும். அதைவிடுத்து மெட்ரோ என்று கூறி பெரிய தூண்களை நிறுத்தி நெரிசலை உண்டாக்குகின்றனர்.
எஸ்ஐஆர் கொண்டு வரும்போது மேற்கு வங்கத்தில் மம்தா அதனை எதிர்த்து செயல்படுத்த முடியாது என்று மக்களை திரட்டி போராட்டம் செய்கிறார். ஆனால் தமிழகத்தில் அதனை அரசே செயல்படுத்துகிறது.
இரட்டை வாக்குரிமை, இறந்தவர் வாக்குகளை நீக்க வேண்டும். அதைவிடுத்து மொத்தமாக அழித்து மறுபடியும் பதிவு செய்யுங்கள் என்றால் அதற்கான கால அவகாசம் இருக்கிறதா? 'தேர்தல் ஆணையம், நீதிமன்றம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு துறைகள் எல்லாம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. ஆட்சி அதிகாரம் அதில் தலையிடாது, சுதந்திரமாக செயல்படும்' என்று நாம் நினைத்துக் கொண்டிக்கின்றோம். ஆனால் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களின் விரல்களாக அவை இயங்கும்” என சீமான் தெரிவித்தார்.
செய்தியாளரை ஒருமையில் பேசிய சீமான்: கோவை, மதுரை மெட்ரோ திட்ட பணி, எஸ்ஐஆர் பணி குறித்து அடுத்தடுத்து கேள்வி எழுப்பியதால் ஆவேசமான சீமான், தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் கடுமையான சொற்களாலும் திட்டினார். அவரை வெளியேற்றவும் கூறினார். அப்போது அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் செய்தியாளரை ஆபாசமாக பேசி, தள்ளி தாக்க முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.