படம்: ஜெ.மனோகரன்

 
தமிழகம்

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ‘பறக்கும்’ வாகனங்களால் விபத்து அபாயம்!

இல.ராஜகோபால்

கோவை அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் பல வாகனங்கள் மிக அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்து ஜி.டி.நாயுடு மேம்பாலம் என பெயர்சூட்டினார்.

புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதால் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக ‘பீக் ஹவர்ஸ்’ என்று சொல்லக்கூடிய போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நேரங்களில் கூட வாகன ஓட்டிகள் நிம்மதியாக கடந்து செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய மேம்பாலம் பல நன்மைகளை கொண்ட போதும் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவி்த்துள்ளனர்.

இதுகுறித்து பீளமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் கூறியதாவது: கோவை அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் நகர் பகுதிக்கு போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல உதவுகிறது.

ஆனால் சில இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் (தனியார் பேருந்து, லாரி, சரக்கு வேன் உள்ளிட்டவை) மிக அதிக வேகத்தில் (100 கி.மீ-க்கு மேல்) வாகனங்களை மேம்பாலத்தில் இயக்குகின்றனர்.

மேம்பாலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் கீழே இருந்து மேல வருவதற்கும், மேலே இருந்து கீழே இறங்குவதற்கும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சாலை சந்திப்பு பகுதிகளில் இணையும் வாகனங்கள், அதிக வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரியளவில் விபத்து ஏற்படும் முன் ‘ஏஐ’ தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன கேமராக்களை மேம்பாலத்தின் மேல் பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தி கண்காணித்து அதிவேகத்தில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT