தமிழகம்

கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு - தொழில் துறையினர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருப்பதாக தொழில்துறையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நிகழ்கிறது. சில துணை மின்நிலையங்களில் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடம் வரை ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் மின்நிறுத்தமும், சில துணை மின்நிலையங்களில் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை மின்நிறுத்தமும் செய்யப்படுகிறது.

ஏற்கெனவே, கோவை தொழில்துறையானது மூலப்பொருள் விலையேற்றம். எரிபொருள் விலையேற்றம் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அறிவிக்கப்படாத தொடரும் மின்வெட்டால், தொழில் முனைவோருக்கு இழப்புகள் ஏற்படுகின்றன.

ஏற்கெனவே மின்கட்டண உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, வடமாநிலத் தொழிலாளிகளின் கூலி உயர்வு என்று எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்து வரும் குறு, சிறு தொழில்கள் தற்போது இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.

கோவை தொழில்துறையினர் சிலர் கூறும்போது, "நிறுவனங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்கள், மின்தடையால் திடீரென நிற்கும்போது. விலை உயர்ந்த பாகங்கள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதியில் மின்வெட்டு இருக்குமானால், அதனை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT