பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழிக்கொண்டை பூக்கள்.படம்: எஸ்.கோபு
பொள்ளாச்சி / மதுரை: ஆயுத பூஜை பண்டிகை நெருங்குவதால் நெகமம் பகுதியில் கோழிக்கொண்டை பூக்கள் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான வெள்ளாளபாளையம், குள்ளக்காபாளையம் ஆகிய இடங்களில் செவ்வந்தி, கோழிக்கொண்டை, அரளி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் பயிரிடப்படுகின்றன. ஆயுத பூஜையின்போது, கோழிக்கொண்டை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களுக்கு தேவை அதிகம் இருக்கும் என்பதால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மஞ்சள், வெள்ளை செவ்வந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும். அடுத்த வாரம் ஆயுத பூஜை வர உள்ள நிலையில் தற்போது செவ்வந்தி, கோழிக்கொண்டை பூக்கள் மலர்ந்துள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஆயுத பூஜை விழாவுக்காக பூக்களை பறித்து மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஒரு டன் கோழிக்கொண்டை பூக்கள் ரூ.95 ஆயிரம் வரை விற்கிறோம். தேவை அதிகளவில் உள்ளதால், பண்டிகை நேரத்தில், கூடுதலாக விலை கிடைக்கும்.
மழையின்றி, வறட்சி காரணமாக இம்முறை சாகுபடி பரப்பும், கிளிகள் பூக்களை சேதப்படுத்துவதால் மகசூலும் குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு பூ வரத்து குறைந்துள்ளது. நவராத்திரி விழா தொடங்கிய நிலையில் ஆயுதபூஜை வரை அனைத்து பூக்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை நேற்று இரு மடங்கு உயர்ந்தது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக வரும் பூக்கள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த வாரங்களில் பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. உதாரணமாக மல்லிகைப்பூ கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையானது. ஆனால், தற்போது கிலோ ரூ.1,000-மாக அதிகரித்துள்ளது.
இதேபோன்று சாமந்தி கிலோ ரூ.250, ஜாதிமல்லி ரூ.500, முல்லை ரூ.500, ரோஜா ரூ.150, சம்பங்கி ரூ.200 என அனைத்துப் பூக்களின் விலையும் கடந்த வாரத்தைவிட இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஆயுத பூஜைக்கு சில நாட்களே உள்ளதால் இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.