மதுரை: மதுரையில் முதல்வர் விஜய் வந்து செல்லும் வழித்தடங்கள், அவர் பங்கேற்கும் விழாக்கள் நடக்கும் இடங்களில் தூய்மைப்பணிக்கு இதுவரை இல்லாதவகையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியை மட்டும் நம்பாமல், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களையும் வரவழைத்து தூய்மைப்பணி மேற்கொண்டு வருவது, லட்சக்கணக்கானோர் கூடும் சித்திரைத் திருவிழாவை தூய்மைப் பணியை வெற்றிகரமாக முடித்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய உள்ளூர் திருவிழாகாலங்கள், முதல்வர் வருகை வழித்தடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர தூய்மைப்பணி மேற்கொள்வார்கள். அந்த வகையில் மதுரை மாநகருக்கு கடந்த திமுக ஆட்சியில் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்த மு.க.ஸ்டாலின் (2021-2026) அரசு விழாக்கள், ஆய்வுப் பணிகள், நலத்திட்டத் தொடக்க விழாக்கள், மற்றும் கட்சி மாநாடுகள் என பல்வேறு காரணங்களுக்காக 12 முறை வந்துள்ளார்.
பலமுறை, மதுரை விமானநிலையத்தில் இறங்கி, வெளியூர்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதுபோல், லட்சக்கணக்கானோர் மதுரையில் கூடும் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, அழகர் கோயில் சித்திரைத்திருவிழா, திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி போன்ற பல்வேறு புகழ்பெற்ற மதுரை திருவிழாக்கள் நடந்துள்ளன.
இந்த காலக்கட்டங்களில் மாநகராட்சி ஆணையாளர் மேற்பார்வையில் மாநகராட்சி நகர்நலப்பிரிவு தலைமையில், மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மட்டுமே தூய்மைப்பணி மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் இருந்து, திருவிழாக்களில் தொடங்கி இன்று முதல்வர் விஜய் வருகைக்கான தூய்மைப்பணி வரை, மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மட்டுமில்லாது வெளியூர் நகராட்சிகள், மாநகராட்சிகளில் இருந்து தூய்மைப் பணியாளர்கள், வாகனங்கள் வரவழைக்கப்படுவது புது நடைமுறையாக உள்ளது.
பொதுவாக இயற்கை பேரிடர் காலங்களில் மட்டுமே, மற்ற மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள், சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், நகர்பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணி, தூய்மைப்பணியில் ஈடுபடுவார்கள்.
ஆனால், கடந்த மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் வெளியூர் மாநகராட்சிகளை சேர்ந்த 1,000 தூய்மைப் பணியாளர்கள், அதிகாரிகள் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது, இதுவரை இல்லாத நடைமுறையாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது முதல்வர் விஜய் வருகைக்காக, அவர் விமானநிலையம் முதல் அவர் நகர்பகுதியில் வந்து செல்லும் மீனாட்சியம்மன் கோயில் வழித்தடங்கள், தாய்மாமன் மோதிரம் திட்டம் விழா நடக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதிகள், புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் திறப்பு விழா நடக்கும் பகுதிகளில் மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மட்டுமில்லாது, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி நகராட்சிகளை சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தூய்மைப்பணி நடக்கிறது.
மாநகராட்சியை நம்பாமல், பிற நகராட்சி தூய்மைப் பணியாளர்களையும் ஆட்சியர், முதல்வர் வருகை தூய்மைப் பணிக்கு வரவழைத்துள்ளனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.