சென்னை: பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (பிஏஐ) தென்னக மையம் சார்பில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (ரெரா), இக்கால புதுப்பிப்புகள், விதி திருத்தங்கள் மற்றும் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்பகட்டிடங்களை வடிவமைக்க உதவும் 3டி பிரின்டிங் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் அசோசியேஷன் மையத் தலைவர் கே.கோபிநாதன் தலைமையில் அம்பத்தூரில் நேற்று நடை
பெற்றது.
இதில் இந்திய கட்டுநர் சங்க, தமிழக கிளையின் சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி கமிட்டி தலைவர், பொறியாளர் எஸ்.ராமபிரபு பேசியதாவது: கட்டுமானப் பணிகளின்போது ரெரா எண் இல்லாமல் விளம்பரம் செய்தால் திட்ட மதிப்பின் அடிப்படையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். எனவே அதில் திட்டமிடல் அவசியம்.
பத்திரப்பதிவு துறையில் ஆக.17 முதல் வருகையில்லா பத்திரப்பதிவு முறை கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதன்மூலம் மனைப் பிரிவுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை பதிவுகளுக்கு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல், கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களிலேயே பதிவுகளை எளிதாக செய்துகொள்ள முடியும்.
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியின் ஒரு கி.மீ. எல்லைக்குள் 12 கிராமங்களின் 8,400 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த அக்டோபர் முதல், இந்த எல்லைக்குள் புதிய திட்ட அனுமதிகள் வழங்கப்படாததால் 5 லட்சம் குடும்பங்கள், 1.25 லட்சம் பட்டா நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொழில் உரிமங்களைப் புதுப்பிக்க ராம்சார் தடையில்லா சான்றிதழ் கட்டாய மாக்கப்பட்டுள்ளதால் முதலீடுகளும் பாதிக்கப்படுகின்றன. இப்பிரச்சினைக்கு சட்டரீதியானதீர்வு காண கிரெடாய் அமைப்பு உள்ளிட்ட சில கட்டுமான நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், தீர்ப்பு ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, இங்கு புதிய முதலீடுகளை மேற்கொள்வது குறித்து கவனமாக செயல்படுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.