சென்னை: இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இச்சம்பவத்தில் இயந்திரக்கோளாறால் படகு நெடுந்தீவு கரையை ஒட்டி தரைதட்டி நின்ற நிலையில், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாக கூறி, படகையும் மீனவர்களையும் சிறை பிடித்துள்ளனர்.
நமது மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. பாக்ஜலசந்தியை நம்பி வாழும் மீனவர்கள் மத்தியி்ல் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
எனவே, உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக இலங்கை அரசுடன் பேசி, ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விரைவாக விடுவித்து, பாதுகாப்பாக தாயகம் திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கூட்டு செயல்பாட்டுக் குழு மூலம் இரு தரப்பு பேச்சுவார்த்தையை விரைவாக நடத்துவது மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் நிகழா வண்ணம் தீர்வு காண்பதற்கு உதவும். மீனவர்களின் வாழ்வாதாரம், நலன்களை பாதுகாக்க தாங்கள் தனிப்பட்டமுறையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர்
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் நிரந்தரமாக பாதுகாப்பை பெறுகிற வகையில் இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்த கூட்டு நடவடிக்கைக்குழு அமைத்து இத்தகைய கைது நடவடிக்கைகளை கண்காணித்து உரிய தீர்வை காண வேண்டுமென நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 -ம் ஆண்டு வரை 1306 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு,179 படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
எனவே, அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாக்க, இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை உடனடியாக விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.