தமிழகம்

“3 துறை தணிக்கை அறிக்கை நிறைவு... ‘கசிவு’ அறிக்கைகளை முதல்வர் வெளியிடுவார்” - மரிய வில்சன்

செய்திப்பிரிவு

சென்னை: “இதுவரை மூன்று துறைகளுக்கான தணிக்கையை முடித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறோம். கசிவு தொடர்பான அறிக்கைகள் முதல்வரின் மேசை மீது உள்ளது. அதை எப்போது பேச வேண்டும் என அவர்தான் முடிவு எடுப்பார்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது. இதில் திமுக எம்எல்ஏ எஸ்.ரகுபதி பேசும்போது, “வளர்ந்து வரும் இளம் ஒப்பந்ததாரர்களுக்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்து இருக்கிறோம். பல்வேறு விதிமுறைகளை தளர்த்தி இருக்கிறோம். ஒப்பந்தத்தில் ஆரோக்கியமான போட்டி உருவாகும். அரசின் வீண் செலவுகள் குறையும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

போட்டி உருவாகும் போது, வீண் செலவு குறையும் என்பது எப்படி என எனக்கு தெரியவில்லை. பட்ஜெட்டில் நிறைய இடங்களில் கசிவு என புது வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறதே?” என்றார்.

அதற்கு அமைச்சர் மரிய வில்சன், “இதுவரை மூன்று துறைகளுக்கான தணிக்கையை முடித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறோம். கசிவு தொடர்பான அறிக்கைகள் முதல்வரின் மேசை மீது உள்ளது. அதை எப்போது பேச வேண்டும் என அவர்தான் முடிவு எடுப்பார்.

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் எத்தனை துறைகளில் தணிக்கை செய்தார்கள் என எனக்கு தெரியாது. இந்த அரசு பதவி ஏற்ற 60 நாட்களில் 3 துறைகளில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதை படிக்கவே உங்களுக்கு நூறு நாட்களாகும்” என்றார்.

SCROLL FOR NEXT