முதல்வர் விஜய் | கோப்புப் படம்
சென்னை: தூத்துக்குடி பள்ளி மாணவி பாலியல் படுகொலை வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, துரிதமாக விசாரிக்கப்பட்டு, தர்மமுனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு, பாலியல் குற்றம் மற்றும் கொலைக் குற்றத்திற்காக இரட்டை தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இக்கொடூர சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் மிகத் துரிதமாக நீதி வழங்கப்பட்டுள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் அரசின் நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாக வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.