சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை அனுபவங்கள், ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) எனும் சுயசரிதை நூலாகத் தொகுக்கப்பட்டு கடந்த நவ.10-ம் தேதி இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்தது.
இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்க ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று முதல்வர் விஜய் டெல்லி செல்ல உள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று செல்லும் விஜய் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுக்கிறார்.
அதன்பின் விழாவுக்குச் செல்கிறார். பிறகு நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவே தனி விமானத்தில் திரும்புகிறார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு கடந்த ஜூன் மாதம் நிதி ஆயோக் கூட்டத்துக்காக டெல்லி சென்ற விஜய், அப்போது சோனியா மற்றும் ராகுலை சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக, இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு கடந்த அக்.10-ம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய் இல்லத்துக்கு ராகுல் வந்து நட்பு பாராட்டினார்.
இந்நிலையில், சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் டெல்லி செல்வது, இண்டியா கூட்டணியில் தவெக-வின் பங்களிப்
பையும், காங்கிரஸ் - தவெக உறவையும் மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், காவிரியின் குறுக்கே கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்ட முயல்வதற்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழலில், இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரும், முதல்வர் விஜய்யும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் மேகேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.