சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை முதல்வர் விஜய் நாளை மாலை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்த அவர், பதவியேற்பு விழா மேடையிலேயே அதுதொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, அதிரடிப் படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த படையில் மேலும், ஒரு எஸ்.பி. 2 டிஎஸ்பி, மற்றும் 4 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெறும் பெண் போலீஸார் மற்றும் பெண் எஸ்.ஐ.களுக்கு நேவி ப்ளூ நிற சட்டை - காக்கி பேன்ட் என்ற சிறப்பு சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு தொப்பி, கருப்பு ஷூ என பார்ப்பதற்கு மிடுக்காக காணப்படும் வகையில் இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் கடந்த 29-ம் தேதி தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. கடந்த வாரம் திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அடுத்த வாரம் தொடங்கி வைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நாளை (ஜூன் 9) மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.