சென்னை: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தவெக ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, முதல்வர் விஜய், செப்.10 முதல் 17-ம் தேதி வரை லண்டன் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது உலகளாவிய முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.15,300 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரியில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
100-க்கும் மேற்பட்ட நாடுகள்... இதுகுறித்து தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் - க்ளோஸ்டர்ஸ் நகரில் அடுத்தாண்டு ஜனவரி 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசுபிரதிநிதிகள், 1,000 முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகள், சமூக அமைப்புகள் பங்கேற்க உள்ளன. உலகளாவிய தொழில் முதலீடு குறித்து விவாதிக்கப்படும் இந்த மாநாட்டில், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளார்’’ என்று தெரிவித்தனர்.